

கோவை:
கோவையை அடுத்த குருடம்பாளையம் ஊராட்சி வெற்றிலைக்காளிபாளையம் பகுதியில் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ ஆகாய முனீஸ்வரன் கோவில் மற்றும் வைஷ்ணவி தேவி, கவுமாரி, துர்க்கை அம்மன், மூலஸ்தானம் மற்றும் அர்த்த மண்டபத்தை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.
இப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததையடுத்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. 4 கால பூஜைகள், முளைப்பாரி அழைப்பு மற்றும் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. இப்பூஜைகளின் நிறைவில், விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை கோவை காமாட்சிபுரி ஆதீனம் சக்தி பீடம் ஆதிமுதல்வர் ஞானகுரு சப்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் நடத்தி வைத்தார். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.