

நெல்லை,
நெல்லை மாநகரில் நடைபெற்ற தசரா விழாவில், அம்மன் சப்பரங்கள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) இரவு மகிஷாசுர சம்ஹாரம் நடைபெறுகிறது.
மைசூரு, குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக நெல்லை மாநகரிலும் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு தசரா திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற்று வந்தது. நேற்று விஜயதசமி மற்றும் தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அம்மன் கோவில்களில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வண்ணார்பேட்டையில் பிரசித்தி பெற்ற பேராத்து செல்வி அம்மன், உச்சினி மாகாளியம்மன், முத்தாரம்மன் ஆகிய 3 அம்மன் கோவில்களின் சப்பரங்கள் வண்ணார்பேட்டை நகர பகுதியில் நேற்று காலை மேளதாளங்கள் முழங்க அணிவகுத்து வீதி உலா வந்தன. சிம்ம வாகனங்களில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்கள் வீதி உலா வரும் நிகழ்ச்சியில், சிவன், பார்வதி, முத்தாரம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் ஆட்டம், பாட்டத்துடன் பங்கேற்றனர். வண்ணார்பேட்டை சாலைத் தெரு சந்திப்பில் 3 அம்மன்களுக்கும் ஒருசேர மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, பேராத்து செல்வி அம்மன் பாளையங்கோட்டைக்கு எழுந்தருளி, இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறவுள்ள மகிஷாசுர சம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதேபோல், பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஆயிரத்தம்மன் கோவில் உள்ளிட்ட 12 அம்மன் கோவில்களிலும், நெல்லை சந்திப்பு, நெல்லை டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதன் முக்கிய நிகழ்வாக நேற்று நள்ளிரவில் பாளையங்கோட்டையில் 12 அம்மன்கள் சப்பரங்களில் எழுந்தருளினர். தொடர்ந்து எல்லைக்கு பயணம் செய்தல், வீதி உலா வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று (புதன்கிழமை) காலையில் 12 அம்மன் சப்பரங்களும் ராமசாமி கோவில் திடலில் வரிசையாக காட்சி தந்தன. மதியம் ராஜகோபால சுவாமி கோவில் முன்பும், மாலையில் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியிலும் பக்தர்களுக்கு வரிசையாக காட்சி அளிக்கின்றன. இன்று நள்ளிரவில் இந்த சப்பரங்கள் அனைத்தும் எருமைக்கிடா மைதானத்துக்கு வருகின்றன. அங்கு மகிஷாசுர சம்ஹாரம் நடைபெறுகிறது. ஆயிரத்தம்மன் இந்த சம்ஹாரத்தை நிகழ்த்துகிறார்.
நெல்லை டவுனில் நேற்று இரவு சக்தி தரிசனம் நடைபெற்றது. பகவத்சிங் தெரு துர்கை அம்மன், தடிவீரன் கோவில் கீழத்தெரு தேவை ஸ்ரீமாரியம்மன், திருப்பணிமுக்கு மாரியம்மன், தடிவீரன் கோவில் மேலத்தெரு தேவி ஸ்ரீ சுந்தராட்சி அம்மன், சிவா தெரு முத்துரம்மன் உள்பட 34 அம்மன் நேற்று எழுந்தருளினர். இரவில் நெல்லை டவுன் ரதவீதி பகுதிகளில் இந்த சப்பரங்கள் ஒன்று சேர்ந்து சக்தி தரிசனமாக காட்சி கொடுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதை தொடர்ந்து மகிஷனை வென்று மாநகர் தன்னில் வெற்றிகொள் அம்பிகையாக 34 அம்மன்களும் வலம் வந்தனர். இதனால் நெல்லை மாநகரம் முழுவதும் நேற்று இரவு தசரா திருவிழா களைகட்டியது. இதுதவிர நெல்லை சந்திப்பு பகுதியிலும் 3 சப்பரங்கள் வீதிஉலா வந்தன.