தேவ் தீபாவளி.. காசியில் 11 லட்சம் அகல் விளக்குகளால் ஜொலித்த படித்துறைகள்

வேத மந்திரங்கள் முழங்க 21 அர்ச்சகர்கள் பாரம்பரிய முறைப்படி கங்கை ஆரத்தி நடத்தினர்.
தேவ் தீபாவளி, காசி படித்துறைகளில் 11 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன
அகல் விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலித்த படித்துறைகள்
Published on: 

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தேவ் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கங்கை நதிக்கரையில் உள்ள 84 படித்துறைகளிலும் சுமார் 11 லட்சம் மண் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. 21 அர்ச்சகர்கள் மற்றும் 42 இளம்பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட கங்கை ஆரத்தி நடைபெற்றது.

தீப அலங்காரத்துடன் லேசர் ஒளிக்காட்சிகள், பக்தி இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய கங்கை ஆரத்தி என வாரணாசி நகரமே விழாக்கோலம் கொண்டது.

தேவ் தீபாவளி நிகழ்ச்சிகள்

தேவ் தீபாவளியை முன்னிட்டு தசாஷ்வமேத படித்துறையில் கங்கா சேவா நிதி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தசாஷ்வமேதம் மற்றும் அருகிலுள்ள படித்துறைகளில் மட்டும் 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

விழாவின் முக்கிய அம்சமாக, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 20 அடி உயரத்தில் அமர் ஜவான் ஜோதி மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் மூத்த அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 39-வது கோர்க்கா பயிற்சி மைய வீரர்கள் இசைக்குழுவுடன் இணைந்து இறுதி மரியாதை அணிவகுப்பு மற்றும் கார்டு ஆஃப் ஹானர் நிகழ்ச்சியை நடத்தினர்.

காசி படித்துறையில் கங்கை ஆரத்தி
காசி படித்துறையில் கங்கை ஆரத்தி

விழாவின் தொடக்கத்தில் டாக்டர் ரேவதி சகல்கர் மற்றும் தபேலா கலைஞரின் பக்தி, தேசபக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனுப் ஜலோட்டா உள்ளிட்ட கலைஞர்களும் கங்கை கரையில் இசை நிகழ்ச்சிகளை வழங்கினர்.

வேத மந்திரங்கள் முழங்க 21 அர்ச்சகர்கள் கங்கை ஆரத்தியைத் தொடங்கினர். ராம் ஜனம் யோகி 4 நிமிடங்கள் 21 விநாடிகள் தொடர்ந்து சங்கு ஊதி நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தார். துர்கா சரண் கல்லூரியைச் சேர்ந்த 42 மாணவிகள் ரித்தி, சித்தி வடிவில் ஆரத்தியில் பங்கேற்றனர். காசி விஸ்வநாத் டம்ரு குழுவைச் சேர்ந்த 10 பேரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தேவ் தீபாவளி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்றனர். விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

X