

திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில் ஆடி மாதத்துக்கான பவுர்ணமி நேற்று முன்தினம் இரவு 7.32 மணி அளவில் தொடங்கி நேற்று இரவு 8.54 மணிக்கு நிறைவடைந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் மாலை முதல் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்ல தொடங்கினர். இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதனால் நேற்று முன்தினம் இரவில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
2-வது நாளாக நேற்று காலை விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டனர். கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் காலை 11 மணி வரையில் பரவலாகவே காணப்பட்டது. பின்னர் பக்தர்கள் கூட்டம் குறைய தொடங்கியது. இருப்பினும் தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்றபடியே காணப்பட்டனர்.
மீண்டும் மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. நேற்று இரவு 8.54 மணி வரையில் பவுர்ணமி இருந்ததால் நள்ளிரவு வரையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது. கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு கிரிவலப்பாதையில் பல்வேறு இடங்களில் தண்ணீர், மோர், அன்னதானம் போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டது.
இதற்கிடையில் பவுர்ணமி கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் பொது தரிசனமாக ராஜகோபுரம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கும் மேலானதாக தெரிவித்தனர்.
வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் இணை ஆணையர் பரணிதரன் தலைமையிலான பணியாளர்களால் குடிநீர், மோர், வாழைப்பழம், தர்பூசணி, பிஸ்கெட் போன்றவை வழங்கப்பட்டது. மேலும் கிரிவலப்பாதை மற்றும் கோவிலில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல ரெயில் நிலையம் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் குவிந்தனர். இதனால் அங்கும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரெயில் நிலையத்தில் வேலூர் மார்க்கமாகவும், விழுப்புரம் மார்க்கமாகவும் சென்ற ரெயில்களில் பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இடம் பிடிப்பதற்காக ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி ஏறி இடம் பிடித்தனர்.
அதேபோல் தற்காலிக பேருந்து நிலையங்களிலும் பக்தர்கள் பேருந்துகளில் அமர்ந்து செல்லும் வகையில் ஓடி, ஓடி சென்று ஏறி இடம் பிடித்தனர். இதனால் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.