

பழனி,
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்குள்ள மலைமீது அருள்பாலிக்கும் முருகப்பெருமானை தரிசனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்ற தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அதிலும் வார விடுமுறை, விசேஷ நாட்கள் என்றால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அதன்படி நேற்று வாரவிடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதிகாலை முதலே பழனி அடிவாரம், பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி, மலைக்கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதன் காரணமாக கோவிலில் உள்ள பொது மற்றும் கட்டண தரிசன வழிகளில் நீண்ட வரிசை இருந்தது. இதனால் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தரிசன பாதை மட்டுமின்றி மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப்கார், மின் இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் பழனி சுற்றுலா பேருந்து நிலையத்தில் ஏராளமான வாகனங்கள் நின்றன. நகர் பகுதியில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.