திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனீஸ்வரர் கோவிலில் குவிந்தனர்.
சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
Published on

திருநள்ளாறு,

புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியம் திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். சனீஸ்வர பகவானை சனிக்கிழமைகளில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 6ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா. அப்போது கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனீஸ்வர பகவான் இடம் பெயர்ந்தார். இதன் பலன் 48 நாட்கள் வரை இருக்கும் என்பது ஐதீகம். எனவே சனிப்பெயர்ச்சி நாளில் இருந்து பக்தர்கள் திரளாக வருகை தந்து தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் வார கடைசி மற்றும் சனிப்பெயர்ச்சி நடந்து 2-வது வாரம் என்பதால் நேற்று சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சனீஸ்வர பகவானை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

முன்னதாக அதிகாலை முதலே நளன்தீர்த்த குளத்தில் புனித நீராடிய பக்தர்கள் கலித்தீர்த்த விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டனர். மேலும் கோவிலில் எள் தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.

சனீஸ்வர பகவானுக்கு விசேஷ அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெள்ளி கவசத்தில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யவும், பாதுகாப்பை உறுதிபடுத்தவும் திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Also Read
குழந்தை வரம் தரும் சேலத்து சமயபுரம் மாரியம்மன்
சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
X

Daily Thanthi
www.dailythanthi.com