குழந்தை வரம் தரும் சேலத்து சமயபுரம் மாரியம்மன்

தொடர்ந்து மூன்று அமாவாசையன்று கும்ப படையல் பிரசாதத்தை சாப்பிட்டால் புத்திரதோஷம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சேலம் சமயபுரம் மாரியம்மன்
சேலம் சமயபுரம் மாரியம்மன்
Published on

திருச்சி சமயபுரத்தைப் போல சேலம் சாமிநாதபுரத்தில் சமயபுரம் மாரியம்மன் குடிகொண்டிருக்கிறாள். அமாவாசை அன்று இங்கு வழங்கப்படும் கும்ப படையல் பிரசாதம் பிரசித்தம்.

முன்பொரு காலத்தில் வேப்பமரத்தின் கீழ் சுயும்புவாக எழுந்தளியிருந்தாள் அம்மன். பூஜாரியின் கனவில் தோன்றியவள் சிலையாக வடித்து வழிபட உத்தரவு கொடுத்தாள். அதன்படி சமயபுரம் உட்பட அவள் ஆட்சி புரியும் 27 இடங்களில் இருந்து புற்று மண் எடுத்து வந்து சுதை சிற்பமாக வடித்தனர். 6 அடி உயரத்தில் இந்த அம்மன் அருள்பாலிக்கிறார்.

அமாவாசையன்று நடக்கும் சிறப்பு பூஜைக்காக, முதல்நாள் அதிகாலை 12:00 மணிக்கு கும்ப படையல் பூஜை செய்வர். அதற்காக மொச்சை பயிறு, கத்தரிக்காய் சேர்த்து புளிக்குழம்பு தயார் செய்யப்படும். பச்சரிசி சாதம், முருங்கை கீரை பொரியல், சப்த கன்னியரை குறிக்கும் வகையில் பச்சரிசி மாவினால் செய்த ஏழு மாவிளக்கு உருண்டை வாழை இலையில் வைக்கப்படும். பிறகு ஒரு மாவிளக்கில் மட்டும் தீபம் ஏற்றப்படும். பின் உடுக்கை அடித்து பூஜை செய்வர். மாவிளக்கில் எரியும் தீபத்தில் அம்மன் ஜோதி வடிவாக வந்து கும்ப படையல் உணவை ஏற்பதாக ஐதீகம்.

பூஜை முடிந்ததும் அம்மனுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட கும்ப படையலில் இருந்து கைப்பிடி அளவு உணவு மட்டும் எடுத்து கொடுப்பர். இதை குழந்தை வரம் வேண்டுவோர் சாப்பிடுவர். இவ்வாறு தொடர்ந்து மூன்று அமாவாசையன்று கும்ப படையல் பிரசாதத்தை சாப்பிட்டால் புத்திரதோஷம் தீரும் என்பது நம்பிக்கை.

இங்கு தொட்டில் கட்டியும், மடி சுமந்தும் கோயிலை வலம் வருகின்றனர். தொட்டில் கட்டுவதில் மஞ்சள் துணியின் உள்ளே அம்மனின் சிறிய சிலை இருக்கும். மடி சுமக்கும் வழிபாட்டில் பஞ்சலோக அம்மன் சிலை இருக்கும். இந்த வழிபாட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதவரி பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து அம்மனுக்கு முன்புள்ள திரிசூலத்தில் கட்டுகின்றனர்.

Also Read
மிளகாய் அரைத்து பூசினால் நீதி வழங்கும் அம்மன்
சேலம் சமயபுரம் மாரியம்மன்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com