குலசேகரன்பட்டினம் தசராவிழாவுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

கோவிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தது.
குலசேகரன்பட்டினம் தசராவிழாவுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்
Published on

குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் குவிந்து மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால் கோவிலில் காலை முதல் இரவு வரை கூட்டம் அலைமோதியது.

தசரா திருவிழா

பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அடுத்த மாதம்(அக்.) 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இவ்விழாவின் உச்ச நிகழ்வான மகிஷாசுரசம்கார விழா அக். 20-ந் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் தொடங்கி உள்ளனர். இவ்விழா நாட்களில் அம்மனை தரிசனம் செய்ய வருகைதரும் பக்தர்களின் வசதிக்காக 25 இடங்களில் வாகன நிறுத்தும் இடங்களும், தற்காலிக பஸ் நிறுத்தமும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காளி, முருகன், சிவன், பார்வதி, விநாயகர், கருப்பசாமி, நர்சு, விஷ்ணு. குறவன், குறத்தி, போலீஸ், திருடன், குரங்கு போன்ற பல்வேறு வேடம் அணிந்து விரதம் மேற்கொள்வர். இந்த வகையில் பக்தர்கள் 60 நாட்கள், 40 நாட்கள், 30 நாட்கள், 21 நாட்கள், 11 நாட்கள் என மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வேடம் அணிந்து காணிக்கை வசூல் செய்வர். இந்த காணிக்கையை தசரா அன்று கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தி வேடத்தை கலைத்து விரதத்தை முடித்து கொள்வர்.

கூட்டம் அலைமோதியது

இதில் காளி வேடம் அணியும் பக்தர்கள் ஏற்கனவே கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். மற்ற பக்தர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் கோவிலுக்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர். நேற்று நூற்றுக்கணக்கான வாகனங்களிலும், பஸ்கள், ரெயில்கள் மூலமும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் குலசேகரன்பட்டினத்தில் குவிந்தனர். அதிகாலை முதல் கடலில் பக்தர்கள் புனிதநீராடி, கோவிலில் மாலை அணிந்து சாமி தரிசனம் செய்து விரதத்தை தொடங்கினர். இதனால் இரவு வரை குலசேகரன்பட்டினம் வீதிகளிலும், சிதம்பரேஸ்வரர் கடற்கரையிலும், கோவில் வளாகத்திலும் கூட்டம் அலைமோதியது. கோவிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு. வழக்கமான பூஜைகள் நடந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com