அட்சய திருதியைக்கு இணையான ‘தன திரயோதசி’: தங்கம், வெள்ளி வாங்க உகந்த நாள்

தன்தேராஸ் நாளில் தன்வந்திரி பகவான், லட்சுமி தேவி மற்றும் குபேரனை வழிபாடு செய்து வணங்கும் வழக்கம் உள்ளது.
தன்தேராஸ் 2026- நகைகள் வாங்க நல்ல நாள்
தன்தேராஸ்- நகைகள் வாங்க நல்ல நாள் (AI Image)
Published on: 

இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. இந்த பண்டிகை ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமான சம்பிரதாயங்கள், மத நம்பிக்கைகளை பின்பற்றி கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் வட இந்தியாவில் தீபாவளி 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதாவது தன்தேரோஸ் (தன திரயோதசி), நரக சதுர்த்தசி, லஷ்மி பூஜை, கோவர்த்தன பூஜை மற்றும் பாய் தூஜ் என கொண்டாடப்படுகிறது.

இதில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய திரயோதசி நாளில் கொண்டாடப்படுவது தான் தன்தேராஸ். இந்து நாட்காட்டியின்படி, ஐப்பசி அல்லது கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை திரயோதசி திதியில் இந்த பண்டிகை வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், நவம்பர் 6-ம் தேதி தன்தேராஸ் கொண்டாடப்படுகிறது. வட இந்திய கலாச்சாரத்தில் இந்த நாள் செல்வம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.

தங்கம் வாங்க நல்ல நாள்

தன்தேராஸ் நாளானது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்நாளில் அட்சய திருதியை தினத்தைப் போன்றே தங்கம் வாங்குவது, வீட்டிற்கு வேண்டிய புதிய பொருட்களை வாங்குவது போன்ற வழக்கம் உள்ளது. இந்து நம்பிக்கைகளின் படி, இந்த நாளில் தங்கம், வெள்ளி மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

தந்தேராஸை தன திரயோதசி என்றும் அழைப்பர். இதில் தனம் என்பது செல்வத்தையும், திரயோதசி என்பது 13ஆவது திதியையும் குறிக்கிறது. இந்நாளில் தான் ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுளாக கருதப்படும் தன்வந்திரி, மகா விஷ்ணுவின் அவதாரமாக அவதரித்தார்.

தன்தேராஸ் நாளில் தன்வந்திரி, லட்சுமி, குபேர பூஜை
தன்தேராஸ் நாளில் சிறப்பு வழிபாடு (AI Image)

இந்த நாளில் ஆயுர்வேதத்தின் கடவுளான தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். அத்துடன் வீட்டில் செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி போன்றவை பெருக வேண்டும் என்பதற்காக மக்கள் செல்வத்தை வழங்கும் தெய்வமான லட்சுமி தேவியையும், செல்வத்தைக் காக்கும் குபேரனையும் வழிபடுவார்கள். அதுமட்டுமின்றி, இந்நாளில் யமனின் பெயரில் அகல்விளக்கு ஏற்றுவது, அதாவது யம தீபம் ஏற்றுவது, பல இந்து வீடுகளில் பின்பற்றப்படும் மற்றொரு முக்கியமான பாரம்பரியமாகும்.

தந்தேராஸ் நாளில் தங்கமும், வெள்ளியும் வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்நாளில் இவற்றை வாங்கும் போது, அது வீட்டில் பெருகும் என்பது நம்பிக்கை.

என்னென்ன பொருட்கள் வாங்கலாம்?

இதுதவிர, லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் புதிய சிலைகள் அல்லது போட்டோக்கள் வாங்கலாம். வீட்டிற்கு தேவையான பித்தளை, செம்பு மற்றும் எஃகு பாத்திரங்கள் வாங்கலாம். தீபாவளிக்கு விளக்கேற்ற தேவையான மண் அகல் விளக்குகளை தன்தேராஸ் நாளில் வாங்கலாம். பூஜைக்கு தேவையான திரி, ஊதுபத்தி, பூக்கள், அரிசி போன்ற அத்தியாவசிய பூஜைப் பொருட்களை வாங்குவ மங்களகரமானதாக கருதப்படுகிறது.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, தன்தேராஸ் பூஜைக்கான முகூர்த்த நேரம் நவம்பர் 6-ஆம் தேதி மாலை 6:34 மணி முதல் இரவு 8:34 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பூஜைகளை செய்யலாம். பூஜைக்குரிய நேரமானது, அந்தந்தப் பகுதிக்குரிய சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்களுக்கு ஏற்ப பூஜை நேரங்கள் கணக்கிடப்படுவதால், ஒவ்வொரு இடத்திற்கும் சற்று மாறுபாடு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

X