

திருப்பதி,
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோவிலில் தர்மசாஸ்தா ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோவிலில் கார்த்திகை மாத ஹோம மகோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் காலை 9 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை சிறப்புப் பூஜைகள், ஹோமம், மகா பூர்ணாஹுதி, கலச பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், கலசாபிஷேகம், தீப ஆரத்தி ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டன.
நேற்று தர்மசாஸ்தா சுவாமி ஹோமம் நடந்தது. அதையொட்டி நேற்று காலை 9 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை சிறப்புப்பூஜைகள், ஹோமம், மகா பூர்ணாஹுதி நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.
ஹோம மகோற்சவத்தின் ஒரு பகுதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில் வள்ளி, தேவசேனா, சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. அதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஹோம மகோற்சவத்தில் கோவில் துணை அதிகாரி நாகரத்னா, கண்காணிப்பாளர் சந்திரசேகர், கோவில் ஆய்வாளர் தாமோதரன் மற்றும் அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்கள் ஒவ்வொரு நாள் ஹோமத்திலும் அல்லது திருக்கல்யாண உற்சவத்திலும் பங்கேற்க தலா ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட்டில் இருவர் பங்கேற்கலாம். ஹோமத்தில் பங்கேற்பவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து வருவது கட்டாயமாகும். திருக்கல்யாண உற்சவத்தில் தம்பதியராக பங்கேற்பது சிறப்பு. இந்த உற்சவத்தில் பங்கேற்கும் தம்பதியினருக்கு ஒரு உத்தரியம், ஒரு ரவிக்கைத் துணி மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்படும்.