

தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வீட்டில் விளக்கு ஏற்றுவது முக்கியமான சம்பிரதாயங்களுள் ஒன்றாகும். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது என்று முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்றுள்ளனர். வீடுகளில் எந்த விசேஷ என்றாலும் முதலில் விளக்கேற்றுவதுதான் வழக்கமாக உள்ளது. திருமணம் முடிந்து வீட்டிற்குள் வரும் மருமகளையும் முதலில் விளக்கு ஏற்றும்படி சொல்வது வழக்கம்.
தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது, லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தி, வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டி நேர்மறை ஆற்றலை உருவாக்கும், வறுமை நீங்கி செல்வ வளம் உண்டாகும் என்பது ஐதீகம்.
இவ்வாறு விளக்கு ஏற்றும்போது, அறியாமல் சில தவறுகளை செய்வதுண்டு. தெரியாமல் செய்யும் இந்த 6 தவறுகள் வீட்டின் நேர்மறை ஆற்றலை குறைக்கலாம்.
1. விளக்கு ஏற்றும் திசை: ஆன்மிக மரபுகளிபடி தீபமானது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி எரிவது சிறந்ததாக கருதப்படுகிறது. எனவே, மற்ற திசைகளில் தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்.
2. விளக்கில் பயன்படுத்தும் திரி: பழைய மற்றும் கருகிய திரியை பயன்படுத்துவதை கைவிட வேண்டும். தினமும் புதிய சுத்தமான திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றுவது நல்லது.
3. தீப எண்ணெய்: நெய் தீபத்திற்கும் எண்ணெய் தீபத்திற்கும் தனித்தனி சிறப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக நெய் மற்றும் எண்ணெய்யை கலந்து ஒரே விளக்கில் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். எதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்தி விளக்கேற்றுவது சிறந்தது.
4. சேதமடைந்த விளக்கு: உடைந்த அல்ல கீறல் விழுந்த விளக்குகளில் தீபம் ஏற்றுவதை தவிர்க்கவேண்டும். முழுமையான சுத்தமான விளக்குகளை பயன்படுத்துவது நல்லது.
5. தீபம் வைக்கும் முறை: தீபத்தை வெறும் தரையில் நேரடியாக வைக்கக்கூடாது. தட்டு அல்து மரப்பலகை வைத்து அதன் மீது தீபத்தை வைப்பது நல்லது.
6. தீபத்தை குளிர வைக்கும் முறை: விளக்கை அணை என்று கூறக்கூடாது, விளக்கை குளிர வை என்றே கூறவேண்டும். வாயால் ஊதியோ, கையால் தட்டியோ விளக்கை குளிர வைக்கக் கூடாது என்றும் முன்னோர்கள் கூறி உள்ளனர். பூவால் மெதுவாக தீபத்தின் சுடர் மீது வைத்து அமிழ்த்தி குளிர வைக்கலாம். ஒரு சிறிய குச்சியால் திரியை எண்ணெய்க்குள் மெதுவாக இழுத்து குளிர வைக்கலாம். இவை பாரம்பரிய முறைகளாக கருதப்படுகிறது.