மேற்கு வங்களத்தில் துர்கா பூஜை கொண்டாட்டம் தொடங்கியது

மக்களை கவரும் வகையில் பிரம்மாண்டமான அலங்காரங்களுடன் பந்தல்கள் மற்றும் துர்கா சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை தொடங்கியது
அலங்கார பந்தலில் நிறுவப்பட்டுள்ள துர்கா தேவி சிலை
Published on: 

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அலங்கரிக்கப்பட்ட பூஜைப் பந்தல்கள் அமைக்கப்பட்டு அதில் அழகிய வடிவங்களில் துர்கா தேவி சிலைகள் நிறுவப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

வழிபாடு

பொதுமக்கள், துர்கா பூஜை பந்தல்களுக்கு சென்று துர்கா தேவியைத் தரிசனம் செய்யத் தொடங்கினர். துர்கா பூஜை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கொல்கததா ஈடர்ன் கார்டன் மைதானத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

துர்கா பூஜையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 'கல்பரம்பா' சடங்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து, துர்கா தேவியை விழாவுக்கு அழைக்கும் 'போதன்' சடங்கும் நடைபெற்றது. இந்த நாளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் அம்மனை வேண்டி வழிபட்டனர்.

துர்கா தேவி, துர்கா பூஜை
துர்கா தேவி

துர்கா தேவி விழித்தெழும் சடங்கு

புராண மரபின்படி, மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக துர்கா தேவி விழித்தெழுவதை 'போதன்' சடங்கு குறிக்கிறது. ராவணனை எதிர்த்துப் போரிடுவதற்கு முன்பு ராமர் துர்கா தேவியை வழிபட்டதாகக் கூறப்படும் புராண நிகழ்வுடன் இந்தச் சடங்கு தொடர்புடையது. இது 'அகால் போதன்' என அழைக்கப்படுகிறது.

பாரம்பரியமாக நடத்தப்படும் உள்ளூர் பூஜைகள் முதல் பிரம்மாண்டமான அலங்காரங்களுடன் அமைக்கப்பட்ட பந்தல்கள் வரை அனைத்தும் மக்களை வெகுவாக கவர்கின்றன. இந்த பந்தல்களை பார்வையிட வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த சில நாட்களில் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் பந்தல்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com