

வந்தவாசி,
வந்தவாசியை அடுத்த காரணை கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடந்து வருகிறது. அதையொட்டி கோவில் வளாகத்தில் 30 நாட்களாக மகாபாரத சொற்பொழிவு நடந்தது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக துரியோதனன் படுகளம் நடந்தது. மகாபாரத போர் எப்படி நடந்தது, பீமன், துரியோதனன் போர்க்களத்தில் எவ்வாறு மோதிக் கொண்டார்கள்? என்பதை இன்றைய இளைஞர்களுக்கு நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.
பாஞ்சாலி வேடமிட்டவர், துரியோதனன் இறந்ததும் கூந்தல் முடியும் காட்சி பக்தர்களை கவர்ந்தது. காந்தாரி வேடம் அணிந்த நாடக கலைஞர், துரியோதனன் இறந்ததும் மரண ஓலமிட்டு கதறி அழும் காட்சியை நடித்துக் காட்டியதுடன் ஏணியில் அமர்ந்தவாறு, கைகளில் இருந்த துடைப்பத்தால் மக்களை அடிப்பதுபோல் நடித்து காண்பித்தார்.
துடைப்பத்தால் அடி வாங்கினால் தங்களை பிடித்திருக்கும் பீடை ஒழிவதாக கருதிய பக்தர்கள், போட்டி போட்டு வந்து துடைப்பத்தால் அடி வாங்கினர். துரியோதனன் படுகள நிகழ்ச்சியை காண பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள், பக்தர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் வந்து கண்டுகளித்தனர்.