கவுந்தப்பாடி: நல்லிகவுண்டனூர் பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கோ பூஜை, தச பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஊராட்சி நல்லிகவுண்டனூர் பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
கும்பாபிஷேகம்
Published on: 

கவுந்தப்பாடி,

கவுந்தப்பாடி அருகே நல்லிகவுண்டனூர் பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி நல்லிகவுண்டனூர் ஏரி மேடு காலனியில் உள்ளது பட்டத்தரசி அம்மன் கோவில். இக்கோவிலில் விநாயகர், பட்டத்தரசி அம்மன், மதுரவீரன், பொம்மியம்மாள், வள்ளியம்மாள், தன்னாசியப்பன், கருப்பண்ண சுவாமி மற்றும் கன்னிமார் சுவாமிகள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள்.

இக்கோவிலில் பட்டத்தரசி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது.

யாகசாலை பூஜைகள்

நேற்று மாலை பெருந்தலையூர் வாணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அதைத் தொடர்ந்து முளைப்பாரி எடுத்து யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டது. மாலை 6:00 மணிக்கு முதல் காலை யாகவேள்வி பூஜை துவங்கி விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் மற்றும் முதற்கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேகம்

இன்று காலை 7 மணி அளவில் இரண்டாம் கால யாகபூஜை துவங்கி நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதி, எந்திர ஸ்தானம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து மேளதாள வாத்தியங்களுடன் கலசங்கள் புறப்பட்டு, பட்டத்தரசி அம்மன் மற்றும் பரிவார் தெய்வங்களுக்கு புனித நீரூற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு கோ பூஜை, தச பூஜை நடை பெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

X