திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்காக விரிவான ஏற்பாடுகள்... தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை

ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, வருகிற 15-ந்தேதி சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.
திருப்பதி பிரம்மோற்சவ விழா, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம்
திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம்
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்களுக்கு எந்தவிதமான அசவுகரியமும் ஏற்படாத வகையில் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து திருமலையில் உள்ள அன்னமய பவனில் நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமை தாங்கி பேசியதாவது:-

திருமலையில் வருகிற 15 முதல் 23-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவை வெகு விமரிசையாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வருகிற 14-ந்தேதி இரவு 7 மணிக்கு அங்குரார்ப்பணம் நிகழ்வுடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. 15-ந்தேதி மாலை 5.30 மணியில் இருந்து இரவு 7 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

சந்திரபாபு நாயுடு பங்கேற்பு

15-ந்தேதி அன்று ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார். முதல்-மந்திரி திருமலைக்கு வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அன்று இரவு 9 மணிக்கு நடக்கும் பெரிய சேஷ வாகன வீதிஉலாவில் முதல்-மந்திரி பங்கேற்று சாமி தரிசனம் செய்கிறார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் காணிக்கையாக வழங்கிய 25 மின்சாரப் பஸ்களை வருகிற 16-ந்தேதி முதல்-மந்திரி, பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கிறார். அத்துடன் 2027-ம் ஆண்டுக்கான தேவஸ்தான காலண்டர்கள், டைரிகளை முதல்-மந்திரி வெளியிடுகிறார்.

தினமும் 10 லட்சம் லட்டுகள்

பக்தர்களின் வருகையை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு தினமும் 10 லட்சம் லட்டுகள் தயாரித்து இருப்பு வைக்கப்பட உள்ளன. பிரம்மோற்சவத்தில் நாடு முழுவதும் 25 மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், ஜெர்மனி நாடுகளில் இருந்தும் நடன, நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

பக்தர்களின் பாதுகாப்புக்காக 3 ஆயிரம் போலீசாருடன், 2 ஆயிரத்து 500 தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆக மொத்தம் பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்களுக்கு எந்தவிதமான அசவுகரியமும் ஏற்படாத வகையில் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

திருமலையில் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளை மேலும் மேம்படுத்த கூடுதலாக 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 300 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கருடசேவை அன்று 9 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களுக்கு ஆயுள் காப்பீடு

பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

சாமி தரிசனம், தங்குமிடம், அன்னப்பிரசாதம், போக்குவரத்து, பாதுகாப்பு. மருத்துவம், தூய்மை, மின்சாரம், மலர் அலங்காரம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்காக 400 ஊழியர்களை கூடுதலாக நியமிக்க அரசுக்கு அனுமதி கோரி அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு முதல்முறையாக ஆயுள் காப்பீடு மேற்கொள்ளும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com