

திருப்பதி,
ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்களில் ஸ்ரீகாளஹஸ்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சொர்ணமுகி நதிக்கரையில் அமைந்து சைவ சமய நெறிகளைப் பின்பற்றும் மிகப் பழமையான கோவில் இது. பஞ்சபூத தலங்களில் வாயு லிங்க க்ஷேத்திரமாகத் திகழ்கிறது.
வேடனான கண்ணப்பர் இறைவன் மேல் கொண்ட பக்தியால் தன் இரண்டு கண்களையும் அர்ப்பணித்து மோட்சம் பெற்ற தலம். மேலும் சிலந்தி (ஸ்ரீ), பாம்பு (காள), யானை (அஸ்தி) என மூன்றும் இத்தலத்து இறைவனை வழிபட்டு மோட்சம் பெற்றதால் அவற்றின் பெயரால் ஸ்ரீகாளஹஸ்தி என்று வழங்கப்படுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252-வது தேவாரத் தலம் ஆகும். ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராகு-கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது.
இந்தநிலையில், கோவிலின் தெற்கு கோபுரம் அருகே உள்ள பிரசாதம் தயாரிக்கும் சமையல் கூடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சமையல் ஊழியர்கள் கேஸ் சிலிண்டர்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டு, மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. தீயின் தீவிரத்தைக் கண்டு பக்தர்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கோவிலுக்குள் பக்தர்கள் வருவதைத் தடுக்கும் வகையில் நுழைவாயில்கள் மூடப்பட்டன. அதிகாரிகள் மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.