

பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் ஊராட்சியில் அருள்மிகு கங்கையம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலை இக்கிராம மக்கள் ஏழு தலைமுறையாக வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலில் மூன்றாமாண்டு தீமிதி திருவிழா கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று காலை அம்மனுக்கு பால் அபிஷேகம், ஸ்ரீ கங்கை அம்மனுக்கு பொங்கல் வைத்தல், சிலை எடுத்து வருதல், சிலை-கரகம் எடுத்து வருதல் நடைபெற்றது. மாலையில் கங்கையில் பக்தர்களுக்கு பூச்சூட்டுதல், பழம் போடுதல், குமரி மக்கள் சாத்துப்பிடி சந்திப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்வான தீமிதி நிகழ்ச்சி, நேற்று இரவு நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், புதிய ஆலயத்தின் எதிரே அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் ஒருவர் பின் ஒருவராக இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று காலை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி மற்றும் அம்மனுக்கு கும்பம் படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.