வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிஷேக ஓராண்டு நிறைவு.. வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா

கும்பாபிஷேக ஓராண்டு நிறைவு விழாவில், வெட்சி எனும் செச்சை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கும்பாபிஷேக ஓராண்டு நிறைவு உற்சவம்
வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா
Published on

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவில் கல்யாண பிரார்த்தனை தலமாகவும், சத்ரு சம்கார பரிகார தலமாகவும் விளங்குகிறது. இங்கு 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இத்திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு ஆனி மாதம் 23-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில், கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு உற்சவம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு சத்ரு சம்கார யாக பூஜை நடைபெற்றது. மாலையில் 1,008 கலசங்கள் நிறுவப்பட்டு யாக பூஜை தொடங்கியது.

யாக பூஜையின் நிறைவாக நேற்று மதியம் மூலவருக்கு 1,008 கலசாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, மூலவருக்குச் சிறப்பு பூஜைகள் நடந்தன. முருகனுக்கு விருப்பமான சிவப்புநிற வெட்சி மலர் மாலை அணிந்து அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 4 மணிக்கு உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. வெட்சி மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இரவு வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com