

வள்ளியூர்,
வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆவணித் தேரோட்டத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி தேரோட்டத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது.
கொடியேற்ற நிகழ்வையொட்டி மங்கள வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க கொடிப்பட்டத்திற்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, வேத மந்திரங்கள் ஒலிக்க பக்தர்களின் ‘கோவிந்த நாமம்’ முழங்க, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
பின்னர் கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட நவதிரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடைபெறும் தேரோட்டத் திருவிழாவில் சுவாமி தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் பக்தர் பேரவையினர் செய்து வருகின்றனர்.