

சென்னை,
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் நடைபெற்ற கருட சேவையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நரசிம்மர் பிரம்மோற்சவ விழா கடந்த 25-ந் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது. சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு, வடக்கு குளக்கரை தெரு, தெற்கு மாட வீதி உள்ளிட்ட வீதிகளில் நரசிம்மர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருட வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்த பகவானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
30-ந்தேதி ஏகாந்த சேவை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 1-ந்தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் அதிகாலை 5 மணி அளவில் திருத்தேரில் நரசிம்மர் எழுந்தருள உள்ளார். தேரோட்டம் காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க இருக்கிறார்கள்.
கோவில் நிர்வாகம் சார்பில் இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, ஜூலை 4-ந்தேதி இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணம் எனும் சிறிய திருத்தேர் நிகழ்வு நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.