பூரி ரத யாத்திரையை காண 65 இடங்களில் பிரமாண்ட எல்.இ.டி. திரைகள்

பூரி கடற்கரை பகுதி, புவனேஸ்வர்-பூரி தேசிய நெடுஞ்சாலை, பூரி-கோனார்க் மரைன் டிரைவ் மற்றும் பூரி-பிரம்மகிரி சாலை ஆகிய இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்படுகின்றன.
பூரி ஜெகன்னாதர் கோவில், பூரி ரத யாத்திரை 2026
பூரி ரத யாத்திரை
Published on

புவனேஸ்வர்,

உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் ரத யாத்திரை அடுத்த மாதம் (ஜூலை) 16-ம் தேதி தொடங்க உள்ளது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான தேர்களில் ஜெகநாதர், பாலபத்திரர் (பலராமர்), சுபத்ரா தேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி யாத்திரையை தொடங்குவார்கள். 9 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். தேர்கள் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை (குந்திச்சா கோவில்) சென்றடைந்ததும் அங்கு ஒரு வார காலம் ஜெகநாதர் ஓய்வெடுப்பார். பின்னர் மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகநாதர் கோவிலை வந்தடைந்ததும் ரத யாத்திரை நிறைவுபெறும்.

ரத யாத்திரைக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மூலவர்கள் ஜெகநாதர், பாலபத்திரர் (பலராமர்), சுபத்ரா தேவி ஆகியோருக்கு புதிய தேர்கள் செய்யப்படுவது இந்த திருவிழாவின் சிறப்பு அம்சம் ஆகும். அதன்படி இந்த ஆண்டு புதிய தேர்களின் கட்டுமானப் பணியும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

65 இடங்களில்...

ரத யாத்திரையைக் காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பூரி நகரில் ஒன்றுகூடுவார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த வைபவத்தை காண பூரி நகருக்கு அதிக அளவில் வருகை தருவார்கள். எனவே, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதுதவிர, முதல் முறையாக எல்இடி திரைகள் அமைக்க மாநில அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. ரத யாத்திரையை பக்தர்கள் நேரலையில் காணவும், திருவிழா குறித்த நிகழ்நேரத் தகவல்களைப் பெறவும் ஏதுவாக, பூரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் பிரம்மாண்டமான எல்.இ.டி திரைகள் அமைக்கப்படுகின்றன. மொத்தம் 65 இடங்களில் எல்.இ.டி திரைகளை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

பூரி ஜெகநாதர் கோவில், பூரி ரத யாத்திரை ஏற்பாடுகள்
பூரி ஜெகநாதர் கோவில்

எல்இடி திரை பூமிபூஜை

ஜெகநாதர் கோவிலின் தெற்குப் பகுதியில் உள்ள ஸ்ரீ கௌசல்யா தாஸ் மடத்திற்கு முன்பாக, முதல் எல்இடி திரைக்கான பூமி பூஜை சமீபத்தில் நடைபெற்றது. பூரி மாவட்ட கலெக்டர் திவ்ய ஜோதி பரிதா முன்னிலையில் நடைபெற்ற இப்பூஜையில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்த புதிய வசதி குறித்து மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சந்தோஷ் சேதி கூறியதாவது:-

பூரி மற்றும் பூரியை சுற்றியுள்ள பகுதிகளில் ரத யாத்திரைக்காக மாநில அரசு சார்பில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இதன் மூலம் பக்தர்கள், இந்த விழாவை நேரலையில் காண்பதுடன், ரத யாத்திரைக்கான பூஜைகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.

ரதங்கள் செல்லும் பிரதான பாதை

கடற்கரை பகுதி, புவனேஸ்வர்-பூரி தேசிய நெடுஞ்சாலை, பூரி-கோனார்க் மரைன் டிரைவ் மற்றும் பூரி-பிரம்மகிரி சாலை ஆகிய இடங்களில் இந்த திரைகள் அமைக்கப்படும். ரத யாத்திரையைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும், பிரதான பாதையான 'கிராண்ட் ரோடு' பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.

திரைகளில் வெளியாகும் லைவ் அப்டேட்களை பார்ப்பதன் மூலம், பக்தர்கள் தங்கள் வருகையை மிகவும் சரியாக திட்டமிட முடியும். இது கூட்ட நெரிசலை தவிர்க்கவும், அதிகாரிகள் கூட்டத்தை எளிதாக ஒழுங்குபடுத்தவும் உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பார்க்கிங் வசதிகள்

“ரத யாத்திரை தகவல்கள் மட்டுமின்றி வாகன நிறுத்துமிட வசதிகள், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் அவசரகால சேவைகள் குறித்த தகவல்களும் எல்இடி திரைகள் மூலம் தெரிவிக்கப்படும். பக்தர்கள் குழப்பம் எதுவும் இன்றி ரத யாத்திரையில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்க விரும்புகிறோம்" என்று அந்தத் துறையின் மற்றொரு அதிகாரி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com