

ஒரு முறை இயேசு கலிலேயக் கடற்கரைப் பகுதியை வந்தடைந்தார். அவரது அரும் அடையாளங்களைக் கண்டு பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாய் வருவதைக் கண்டு தம் சீடர்களிடம், 'இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்? என்று கேட்டார்.
அவர்களும் 'இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டுகூட கிடைக்காது' என்றனர். அதே நேரத்தில், மற்றொரு சீடரான பேதுரு கூட்டத்தில் ஒரு சிறுவனிடம் 5 அப்பங்களும், 2 மீன்களும் இருக்கின்றன என்று கூறினார்.
இயேசு, அந்த அப்பங்களை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி மக்கள் கூட்டத்திற்கு பகிரச் சொன்னார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நீங்கலாக அங்கு அமர்ந்திருந்த ஆண்கள் மட்டுமே ஏறக்குறைய ஐயாயிரம் பேர். ஒட்டுமொத்த கூட்டமும் வயிராற உண்டபின் மீதம் இருந்த அப்பத் துண்டுகளை பன்னிரெண்டு கூடைகளில் நிரப்பினர். (யோவா 6:1-13)
இந்தப் புதுமையை சமூகவியல் பார்வையில் சற்று மாறுபட்டு விளக்குபவர்களும் உண்டு. இந்த புதுமை நிகழ்வதற்கு மனிதரின் பங்களிப்பு அவசியமாகிறது. பாலைவனத்தில் வானிலிருந்து உணவாக மன்னாவைப் பொழியச் செய்த கடவுளால் (விப 16:1-17) அன்று கலிலேயக் கடற்கரையிலும் அதே போன்ற புதுமையை நிகழ்த்தியிருக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. பாலைவனத்தில், இஸ்ரயேல் மக்கள் அடிமை தனத்திலிருந்து விடுபட்டு அவசர அவசரமாக எகிப்தை விட்டு பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நிர்கதியாய் இருந்தனர். அந்தச் சூழலில் இறைவன் அவர்களுக்கு எல்லாமுமாய் இருக்கிறார்.
அதே நேரத்தில் இயேசு காலத்தில் இஸ்ரயேல் மக்கள் தங்கள் வீடுகளை அமைத்து நிரந்தர குடியிருப்புகளில் வாழ்ந்து வந்தனர். இத்தகையச் சூழலில் தனது புதுமையில் மக்களின் பங்களிப்பையும் உள்ளடக்குகிறார். இந்தப் பின்னணியில், நம்மில் பல நேரங்களில் எழும் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றான ‘நான் இவ்வளவு துன்பப்படும் இந்த நேரத்தில் இறைவன் எங்கே போனார்?’ என்பதைப் புரிந்து கொள்ள முற்படுவோம்.
மேற்குறிப்பிட்ட புதுமையின் பின்னணியில் இறைவன் மனிதரின் பங்களிப்போடு புதுமையைச் செய்கிறார். ஆனால் பாலைநிலத்தில் மக்களின் பங்களிப்பு இன்றி தானாகவே புதுமை செய்கிறார்.
இதிலிருந்து இறைவனின் செயலில் பங்களிக்கக் கூடியத் திடத்தை நாம் எப்போது பெற்றிருக்கின்றோமோ அப்போது இறைவன் தன் செயல்பாட்டில் நம்மை அனுமதிக்கிறார்.
இதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு அன்னை மேரி. மனிதராகப் பிறந்த அவரை மீட்பின் திட்டத்தில் பங்கு பெறச் செய்கிறார். ( லூக் 1:28-36)
அதேநேரத்தில், மனிதர் இறைவனின் செயலில் பங்குபெற திடனற்று இருக்கும்போது மனிதப் பங்களிப்பின்றி அவரே அந்தச் செயலை முற்றிலும் செய்து முடிக்கிறார். தூய பவுலின் மனமாற்றத்தை இதற்கு ஒரு சான்றாகக் கூறலாம். (தி.ப. 9:3-9)
கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களை கொலை செய்யத் தயாராய் இருந்த பவுலை கண்டு கிறிஸ்துவின் போதனையால் ஈர்க்கப்பட்ட அனைவரும் அஞ்சியபோது, இறைவனே நேரடியாக மனிதப் பங்களிப்பின்றிக் குறுக்கீடு செய்கிறார்.
மேற்கூறிய பின்புலத்தில் நாம் சிந்தித்தால்தான் இவ்வளவு துன்பப்படும் இந்த நேரத்தில் இறைவன் எங்கேப் போனார்? என பல நேரங்களில் நாம் நம்முள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலைக் கண்டுகொள்ள முடியும்.
ஆம், எப்பொழுதெல்லாம் நம் துன்பங்கள் நம்மைவிட்டு அகலாமல் இருக்கின்றதோ அப்பொழுதெல்லாம், அந்த சிறுவனின் ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் போல நம்மிடமும் இறைவன் நமது பங்களிப்பை எதிர்பார்க்கின்றார் என புரிந்துகொள்ளலாம். இங்கு அந்த சிறுவன், தன் கூடையில் இருந்த உணவைப் போல நம்மிடமும் நாம் சந்திக்கும் சவால்களுக்கானத் தீர்வு எங்கோ ஒரு கூடையில் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது.
பெரும் கூட்டமாய் கூடியிருந்த மக்களுக்கு எப்படி உணவு கொடுப்பது என இயேசுவும், சீடர்களும் விவாதித்துக் கொண்டிருந்தது அந்த சிறுவனின் கவனத்திற்கு எட்டியதால் மட்டுமே அவனிடமிருந்த அந்த உணவை அவனால் பகிர முடிந்தது. அந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பகிர அவன் ஆயத்தமாய் இல்லாதிருந்தால் அங்கு ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் உணவருந்தியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது, பன்னிரெண்டு கூடைகளில் மீதி அப்பங்களும் சேர்ந்திருக்க வாய்ப்பில்லாமல் இருந்திருக்கும். அங்கிருந்த தேவை என்ன என தெளிவாக அறிந்திருந்த அந்தச் சிறுவனின் அறிவாற்றலும், தன்னிடம் இருப்பதை தயக்கமின்றிப் பகிரும் ஆயத்த நிலையும் இந்த மாபெரும் புதுமை நிகழ்வதற்கான மனிதப் பங்களிப்பாக அமைந்தன.
நம் வாழ்விலும் புதுமைகள் நிகழ, நாமும் நாம் சந்திக்கும் சவால் எத்தகையது, அதை எதிர்கொள்ள என்ன தேவை என்ற தெளிவும், பெற்ற தெளிவைச் செயலாக்கத் திடத்தோடு அச்சிறுவனைப் போல உள்ளதனைத்தையும் கையளிக்க ஆயத்தமான மனநிலையும் உள்வாங்கும்போது நம் வாழ்விலும் வல்ல செயல்கள் நிகழ்வது சாத்தியமே. இறைவன் எல்லா சூழலிலும் தானாக வல்ல செயல்களை நிகழ்த்திவிடுவது இல்லை, மாறாக நமது பங்களிப்பு எங்கு தேவையோ அங்கு நமது பங்களிப்பிற்காகக் காத்திருக்கிறார். இறைவனோடு அவரது புதுமைகளில் பங்கெடுக்க நாம் தயாராவோம்.