

திருப்பதி,
திருமலை, திருப்பதியில் தேவஸ்தானம் சார்பில் கோகுலாஷ்டமி விழா நடந்தது.
கோகுலாஷ்டமியை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷண சாலையில் நேற்று சிறப்பு கோ பூஜை நடந்தது. கோசாலையில் அமைந்துள்ள ஸ்ரீவேணுகோபாலசாமி கோவிலில் தேவஸ்தான அதிகாரி முத்தாடா, ரவிச்சந்திரா சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். வேத மந்திரங்கள் முழங்க, கோமாதாக்கள் மற்றும் கன்றுகளுக்கு புதிய வஸ்திரம் அணிவித்து, மலர் மாலைகள் சூட்டி, அவற்றை வலம் வந்து பூஜை செய்தார். தொடர்ந்து பசுக்களுக்கு கற்பூர, நெய் தீப ஆரத்தி காண்பித்தார்.
திருமலையில் நேற்று கோகுலாஷ்டமி விழா நடந்தது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் ஒரு பகுதியாக கோகர்ப்பம் அணை பூங்காவில் உள்ள காளிங்க நர்த்தன ஸ்ரீகிருஷ்ணர் சிலைக்கு நேற்று காலை பஞ்சாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அங்கு உறியடி உற்சவம் நடந்தது. அதில் பங் கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதில் தேவஸ்தான தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கவாசல் அருகே இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை உக்ரசீனிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள், ஸ்ரீகிருஷ்ணருக்கு ஏகாந்தமாக திருமஞ்சனம், துவாதச ஆராதனை நடந்தது. தொடர்ந்து பிரபந்த சாத்துமுறை, கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடந்தது. அப்போது ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு வரலாற்றை வேத பண்டிதர்கள் விளக்கினர்.
இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை திருமலையில் உறியடி உற்சவம் நடக்கிறது. உற்சவர் மலையப்பசாமி தங்கத்திருச்சி வாகனத்திலும், ஸ்ரீகிருஷ்ணர் மற்றொரு திருச்சி வாகனத்தி லும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து உறியடி உற்சவத்தை காண்கிறார்கள். இதனால், கோவிலில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.