மைசூரு தசரா விழா கோலாகலமாக தொடங்கியது

தசரா கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்வான ஜம்பு சவாரி அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது.
மைசூரு தசரா திருவிழா தொடங்கியது, துவக்க விழாவில் முதல்-மந்திரி டிகே சிவக்குமார் பங்கேற்பு
மைசூரு தசரா திருவிழா தொடங்கியது
Published on: 

மைசூரு,

வேத மந்திரங்கள் முழங்க பாரம்பரிய நடைமுறைகளுடன் மைசூரு தசரா விழா இன்று தொடங்கியது. துவக்க விழாவில் முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தசரா விழா

கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலகப்புகழ் பெற்றது. ஆண்டுதோறும் நவராத்திரி முதல் நாளன்று தொடங்கி 9 நாட்களும் தசரா விழா வெகு விமரிசையாக நடைபெறும். 11-ம் நாளில் ஜம்புசவாரி எனப்படும் யானைகள் ஊர்வலம் நடக்கும். அப்போது யானைகள் புடைசூழ ஒரு யானை, உற்சவர் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து கொண்டு கம்பீர நடைபோட்டு செல்லும். இந்த கண்கொள்ளா காட்சியை காண லட்சக்கணக்கானோர் மைசூருவில் கூடுவார்கள்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தசரா விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழக்கமான பாரம்பரிய நடைமுறைப்படி தொடங்கியது. இதையொட்டி, மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில், சாமுண்டீஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் எழுந்தருளினார். அதன்பின்னர், 11.50 மணி முதல் 12.13 மணிக்குள் தனுஷ் லக்கனத்தில், தசரா விழா தொடங்கியது. அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, கவி மடத்தின் மடாதிபதி கவி சித்தேஸ்வரா சுவாமி, அம்மன் மீது பூக்களை தூவி தசரா விழாவை தொடங்கி வைத்தார். முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.

ஜம்பு சவாரி

இதனைத் தொடர்ந்து முதல்-மந்திரி கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், உணவு மேளா மற்றும் மலர் கண்காட்சி ஆகியவை அதிகாரப்பூர்வமாக தொடங்கின. அரண்மனையில் பாரம்பரிய முறைப்படி நவராத்திரி கொலு மற்றும் மன்னர் யதுவீர் எம்.பி.யின் தனியார் தர்பார் நடைபெறுகிறது.

தசரா கொண்டாட்டம், கர்நாடகாவின் கலைநயம் மிக்க நாட்டுப்புறக் கலை வடிவங்கள் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமையும். நவராத்திரி நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தசரா கொண்டாட்டங்களின் நிறைவாக அக்டோபர் 21 அன்று ஜம்பு சவாரி நடைபெற உள்ளது. இந்நிகழ்வுகளை காண்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வருகை தருவார்கள். தசரா விழாவையொட்டி மைசூரு நகரம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com