நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தின் சிறப்புகள்

தமிழகத்தில் உள்ள தேர்களில் நெல்லையப்பர் கோவில் தேர் மிகவும் பழமையான தேராகும்.
நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா, தேரோட்டம்
நெல்லையப்பர் தேரோட்டம்
Published on

நெல்லையப்பர் கோவில் ஆனிப்பெருந்திருவிழா 48 நாட்கள் நடக்கும் மிகப்பெரும் திருவிழா ஆகும். இந்த திருவிழா பிட்டாபுரத்தி அம்மன் கோவிலில் தொடங்குகிறது. மூத்த பிள்ளையார் திருவிழா, நால்வர் திருவிழா இவை முடிந்தவுடன் நெல்லையப்பர் கோவிலில் கொடியேறுகிறது. இதுவே ஆனிப் பெருந்திருவிழாவின் மையப்பகுதியாகும்.

3 நாட்கள் முக்கியத்துவம்

இந்த திருவிழா 3 நாட்கள் முக்கியத்துவம் பெருகிறது. அதாவது, 4-ம் நாளில் சுவாமி நெல்லையப்பரும்- காந்திமதி அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி 63 நாயன்மார்களோடு வீதி உலா வருவார்கள்.

8-ம் நாளில் இல்லத்துக்குரிய மூர்த்தியான கங்காளநாதர் எழுந்தருள்கிறார். கங்காளநாதர் நெல்லை மாவட்டத்தில் மட்டும் அறியப்படுபவர். தமிழகத்தில் பிற தலங்களில் 'பிட்சாடனர்' என்று வழிபடப்படும் மூர்த்தியே ஒரு சில மாற்றங்களுடன் இங்கு கங்காளமூர்த்தியாக வழிபடப்படுகிறார். 9-ம் நாள் தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரோட்டம் மிகவும் பிரபலமானது ஆகும். அவ்வகையில் இந்த ஆண்டின் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் இன்று (28.6.2026) கோலாகலமாக நடைபெறுகிறது.

பழமையான தேர்

தமிழகத்தில் உள்ள தேர்களில் நெல்லையப்பர் கோவில் தேரே மிகவும் பழமையான தேராகும். ஆனாலும் இன்று வரையிலும் எந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க மனித சக்தியால் இழுக்கப்படும் மிகப்பெரிய தேர் இது ஒன்றுதான் என்பது தனிச்சிறப்பாகும்.

4 வெளிச்சக்கரங்களும், 4 உள்சக்கரங்களும் கொண்டு தமிழகத்திலேயே அளவில் பெரியதாக திகழும் இந்த தேரின் இரும்பு அச்சு லண்ட னில் செய்யப்பட்டதாகும்.

கங்காளநாதர்

இத்தேரின் முன்பகுதியில் நடுநாயகமாக இறைவனும், அம்மையும் ரிஷப வாகனத்தில் இருக்கும் சிற்பம் உள்ளது. இதன் இருபுறமும் கணபதியும், முருகப்பெருமானும் அவரவர் வாகனங்களில் வீற்றிருக்கின்றனர். இடப்பக்கத்தில் இத்தலத்தின் மூர்த்தியான கங்காளநாதர், குண்டோதரன், மான், மோகினி சிற்பங்கள் உள்ளன. தொடர்ந்து ராவணன் கயிலை மலையை அசைக்கும் சிற்பம் உள்ளது. தேரின் வலப்பக்கம் நடராஜரும், பின்பக்கம் விஷ்ணுவின் தசாவதாரங்களும் காணப்படுகின்றன.

தேரின் ஒவ்வொரு மூலையிலும் வீரபத்திரர் உள்ளார். தேரின் கீழ்மட்டத்தில் பூதகணங்கள் வரிசையாக உள்ளன. தேரின் பின்னால் வீரர்கள் போர்புரியும் சிற்பம் உள்ளது. தேரின் மேல்பகுதியில் அகத்தியர் மற்றும் பிற முனிவர்கள் உள்ளிட்ட சிற்பங்களும் உள்ளன.

தேரோட்டத்தில் மொத்தம் 5 தேர்கள் இழுக்கப்படுகின்றன. அதாவது சுவாமி நெல்லையப்பர் தேரைத் தொடர்ந்து காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தேர்கள் பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்படுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com