

திருத்தணி,
முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடாக திகழ்வது திருத்தணி முருகன் கோவில். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் திரவுபதி அம்மன் கோவிலுக்கு காப்பு கட்டிய பக்தர்கள் அதிக அளவில் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்திருந்தனர். ஒருசில பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொது வழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளில் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் மூலவரை வழிபட்டனர்.
அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்க கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.