

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதில் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும்.
அவ்வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார்-உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள காத்திருப்பு கூடத்தின் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபுரத்தின் வழியாக தரிசனத்திற்கு சென்ற பக்தர்களின் வரிசையானது வட ஒத்தவாடை தெருவில் நீண்டு காணப்பட்டது. மேலும் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள காத்திருப்பு கூடத்தில் பக்தர்கள் காத்திருந்து வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆனதாக தெரிவித்தனர். கட்டண தரிசன வழியில் சென்றவர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்