திருப்பதிக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு... ஒரு நாள் மட்டும் இலவச தரிசன டோக்கன் ரத்து

திருப்பதியில் இன்று இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் நேரடியாக கோவிலுக்கு சென்று காத்திருப்பு வரிசையில் நின்று தரிசனம் செய்யலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோவில்
திருப்பதி ஏழுமலையான் கோவில்
Published on

திருமலை,

ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் இன்றைய இலவச தரிசனத்திற்காக டோக்கன்கள் வழங்கப்படவில்லை.

பல மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

நேற்று முன்தினம் 80 ஆயிரத்து 706 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 838 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 86 லட்சம் செலுத்தப்பட்டு இருந்தது. 4. லட்சத்து 4 ஆயிரம் லட்டுகள் விற்பனையானதாகவும் 2 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டதாகவும், 3 ஆயிரத்து 125 பேருக்கு மருத்துவச் சேவை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் காத்திருப்பு வரிசை சிலாத்தோரணம் வெளியே வரை நீண்டிருந்தது. சர்வ தரிசன டோக்கன் பெறாத பக்தர்கள் சர்வதரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் காத்திருந்தனர்.

நேற்று 82,172 பக்தர்கள் தரிசனம்

இதேபோல் நேற்றும் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. நேற்று 82 ஆயிரத்து 172 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 978 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.5 கோடியே 15 லட்சம் செலுத்தப்பட்டு இருந்தது. 4. லட்சத்து 25 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகின. 2 லட்சத்து 57 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. 3 ஆயிரத்து 234 பேருக்கு மருத்துவச் சேவை வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காத்திருப்பு வரிசையானது சிலாத்தோரணம் வெளியே வரை நீண்டிருந்தது. சர்வ தரிசன டோக்கன் இல்லாத பக்தர்கள் சர்வதரிசனத்திற்கு சுமார் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

சர்வ தரிசன டோக்கன் ரத்து

இந்த நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், திருப்பதியில் வழக்கமாக வழங்கப்படும் இலவச சர்வதரிசன டோக்கன்கள் மற்றும் திவ்ய தரிசன டோக்கன்கள் நேற்று வழங்கப்படவில்லை. இந்த டோக்கன்கள் இன்றைய (வியாழக்கிழமை ஜூலை 9) தரிசனத்திற்கானவை. எனவே, இன்று இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள், நேரடியாக திருமலைக்கு செல்லலாம்.

அதேசமயம் நாளை வெள்ளிக்கிழமை தரிசனத்திற்கான டோக்கன்கள் வழக்கம் போல் இன்று (வியாழக்கிழமை) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com