மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம்பெயர்ந்தார் குரு பகவான்.. கோவில்களில் சிறப்பு வழிபாடு

குருப்பெயர்ச்சி விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் ஆலங்குடிக்கு வருகை தந்து குரு பகவானை வழிபட்டனர்.
குருப்பெயர்ச்சி 2026, ஆலங்குடி குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
ஆலங்குடி குரு பகவான்
Published on

திருவாரூர்,

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு, குருப்பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா இன்று (26.5.2026) நடைபெறுகிறது. குரு பகவான் இன்று காலை 11.08 மணிக்கு மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு இடம்பெயர்ந்தார். இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு குரு ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ஆலங்குடி குரு ஸ்தலம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே குருபகவானுக்குரிய கோவிலான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறுகிறது. காலை 10 மணி அளவில் குரு பகவானுக்கு பால், தயிர், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குருப்பெயர்ச்சி விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் ஆலங்குடிக்கு வருகை தந்து குருபகவானை வழிபடுகின்றனர். வரும் 28-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை 8 நாட்கள் லட்சார்ச்சனை விழா நடக்கிறது.

குருப்பெயர்ச்சி விழா 2026, திருக்காட்டுப்பள்ளி யோக குரு பகவான்
சந்தனக்காப்பு அலங்காரத்தில் யோக குரு பகவான் (இடம்: திருக்காட்டுப்பள்ளி)

திருக்காட்டுப்பள்ளி யோக குரு பகவான்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள புகழ்மிக்க சிவாலயமாக திகழ்வது ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ அக்னிஸ்வர ஸ்வாமி திருக்கோயில். திருக்கோயிலில் மூலவர் சன்னதி பிரகாரத்தில் புடைப்புச் சிற்பமாக ஸ்ரீ யோக குரு பகவான் அமைந்து அருள்பாலித்து வருகிறார்.

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு இந்த ஆலயத்தில் நேற்று மாலை விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கியது. இன்று புனித நீர் அடங்கிய கடம் வைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இரண்டாம் கால யாக பூஜைகள் நிறைவு பெற்றவுடன் புனித நீர் அடங்கிய கடம் புறப்பட்டு, ஸ்ரீ யோக குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ யோக குரு பகவானை வழிபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com