

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான பெரிய பெருமாள், நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.
ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி இன்று காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான் தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு வட காவிரி ஆற்றுக்கு (கொள்ளிடம் ஆறு) சென்றனர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் வட காவிரியில் இருந்து தங்க குடம் மற்றும் வெள்ளி குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து தங்கக்குடத்தில் உள்ள புனித நீரை கோவில் யானை மீது வைத்தும், வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான் தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க தாயார் சன்னதிக்கு எடுத்து வந்தனர்.
பின்னர் தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரெங்கநாச்சியார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டன. அதன்பின் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு புனித நீரால் திருமஞ்சனம் நடைபெற்றது.
இதையடுத்து பாரம்பரிய முறையில் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்ளிட்ட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படும் தைலம் பூசப்பட்டது. இரவு 8.30 மணிக்கு தாயாருக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி தாயார் சன்னதியில் இன்று நாள் முழுவதும் மூலவர் சேவை கிடையாது.
நாளை (சனிக்கிழமை) தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி காலை 7 மணிக்கு தாயார் சன்னதியின் மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் அதிக அளவில் சாதம் குவிக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்படும். பின்னர் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படும். மதியம் 1 மணியளவில் தாயாருக்கு மங்கள ஆரத்தி நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு மேல் தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை உண்டு.