

தூத்துக்குடி,
தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் 9வதான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசியை முன்னிட்டு கைசிக புராணம் வாசித்தல் மற்றும் கருடசேவை நடந்தது.
இந்நிகழ்வை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் அண்ணாவியார் பாலாஜி ஸ்வாமி அழைத்து வரப்பெற்று பெரிய பெருமாள் ஆதிநாதர் சன்னதியில் கைசிக புராணம் வாசிக்கப்பட்டது.
திருக்குறுங்குடி நம்பி சன்னதியில் தாழ்ந்த குலத்தை சேர்ந்த நம்பாடுவான் விரதம் இருந்து நம்பி சன்னிதியில் இசையுடன் கூடிய பாடல்கள் பாடுவார். அவரது கதையை கைசிகப் புராணம் என்பர். இதனை அண்ணாவியார் பரம்பரை பாலாஜி ஸ்வாமி வாசித்தார். அதன்பின் பக்தர்களுக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அவரை பல்லக்கில் சுமந்தபடி அவரது திருமாளிகையில் கொண்டு விட்டனர்.
மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, உற்சவர் பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு இரவு 7.45 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் கண்ணன், விவேக், சுவாதி, நிர்வாக அதிகாரி சதீஷ் ஆய்வாளர் நம்பி, ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் என்ற ராமானுஜம், உறுப்பினர்கள் ராமலட்சுமி, காளிமுத்து, பொன்ராஜ், செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.