

கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தத்தில் பங்காரு அடிகளாரின் 86-வது பிறந்த நாளை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் நேற்று கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. மன்ற தலைவர் அப்பாசாமி ஓம்சக்தி கொடியை ஏற்றி வைத்தார். மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், தொழில் வளம் சிறக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் இந்த பூஜை நடைபெற்றது.
குரு பூஜை, விநாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு முக்கோண வடிவிலான பிரதான யாககுண்டம் அமைக்கப்பட்டு கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
வேள்வியை ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட மகளிரணி தலைவி பத்மாவதி ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். வேள்விக்குழு கிருஷ்ண நீலா பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
பங்காரு அடிகளாரின் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் போடி நாயக்கனூர் ரவிச்சந்திரன், ஆதிபராசக்தி இயக்கம் மூலம் இயற்கை வழிபாடு என்ற தலைப்பில் மதுரை பேராசிரியை இந்திராகாந்தி ஆகியோர் சொற்பொழிவாற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.