வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கல்யாண உற்சவம்

கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் மூன்று முறை கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கல்யாண கோலத்தில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி
கல்யாண கோலத்தில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி
Published on

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு இன்று காலையில் கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உற்சவருக்குப் பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உட்பட பலவித பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ரோஜா, சாமந்தி, கதிர்பச்சை, சம்பங்கி மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை உற்சவர்கள் மணக்கோலத்தில் மயில் மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

அதன்பின்னர் காலை 9.30 மணிக்கு கல்யாண உற்சவம் தொடங்கியது. கோவில் தலைமை அர்ச்சகர் தலைமையில் ஐந்து அர்ச்சகர்கள் யாகம் வளர்த்து மந்திரங்கள் ஓதினர். மங்கலவாத்தியங்கள் ஒலித்திட 11.30 மணிக்கு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. அதன்பிறகு கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் மூன்று முறை கோயில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com