காஞ்சிபுரம் ராகு-கேது பரிகார ஸ்தலம்.. மாகாளேஸ்வரர் திருக்கோவில்

மாகாளேஸ்வரர் கோவிலில் நவகிரகங்கள் தனித்தனி சன்னதியில் தம்பதி சமேதராய் அமைந்து அருள்பலிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாகாளேஸ்வரர் கோவில்
காஞ்சிபுரம் மாகாளேஸ்வரர் கோவில்
Published on

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ளது "மாகாளேஸ்வரர்" கோவில். பல்லவ மன்னர்களின் கட்டிடக்கலையோடு, மகா சர்ப்பங்களின் வரலாறும் இணைந்தது இந்த திருத்தலம். இத்தலத்தின் மூலவர் ஸ்ரீ மாகாளேஸ்வரர் என்றும், அம்பாள் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

தல சிறப்பு

சர்ப்பங்களின் தலைவர்களில் ஒருவனான 'மாகாளன்' என்ற நாகராஜன், தனக்கு சிவபெருமானால் ஏற்பட்ட சாபம் நீங்கவும், அழியாத ஆன்மீக ஆற்றலைப் பெறவும் இத்தலத்திற்கு வந்து மண்ணால் சிவலிங்கம் செய்து, கடும் தவம் புரிந்து சிவபெருமானின் பேரருளைப் பெற்றான். அவனது பெயராலேயே இத்தலத்து ஈசனுக்கு 'மாகாளேஸ்வரர்' என்று திருநாமம் அமைந்தது.

நவகிரகங்கள்

இக்கோவில் ராஜசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்ட மிகப்பழமையான திருத்தலமாகும். கருவறைச் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள நாகாபரண சித்திரங்கள் பல்லவக் கலையின் உன்னதத்தைக் காட்டுகின்றன. வட இந்தியாவில் புகழ்பெற்ற 'உஜ்ஜைனி மாகாளேஸ்வரர்' கோவிலுக்கு நிகராக தெற்கே விளங்கும் மகா சர்ப்ப தலம் இதுவே ஆகும்.

சிறந்த பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் பக்தர்களின் குறை நிவர்த்திக்காக ஒன்பது கிரகங்களும் தனித்தனி சன்னதியில் தம்பதி சமேதராய் அமைந்து அருள்பலிக்கின்றனர். மேலும், ராகு-கேது தனித்தனி சன்னதிக்களில் அமையப்பெற்றிருப்பது சிறப்பு. ராகு, கேது பெயர்ச்சியின்போது ஏராளமான பக்தர்கள், கிரகதோஷ பரிகார நிவர்த்திக்காக இங்கு வந்து வழிபடுகின்றனர்.

காஞ்சிபுரம் மாகாளேஸ்வரர் கோவில், பரிகார தலம்
காஞ்சிபுரம் மாகாளேஸ்வரர்

வழிபாட்டு பலன்கள்

ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் சேர்க்கையால் ஏற்படும் 'மாகாள சர்ப்ப தோஷம்' மற்றும் லக்ன தோஷங்கள் இத்தலத்து ஈசனை வணங்க முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. நீண்ட நாட்களாகத் தடைபட்டுக் கொண்டே இருக்கும் சுபகாரியங்கள், சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் வழக்குகளில் சாதகமான தீர்வுகள் உண்டாகும்.

தவம் புரிவதற்கும், சித்தர்களின் தத்துவங்களை உணர்வதற்கும் ஏற்ற அமைதியான சூழல் இக்கோவிலில் உள்ளதால், இங்கு வந்து வழிபட்டால், தேவையற்ற மன உளைச்சல்கள் நீங்கி ஆழ்ந்த நிம்மதி கிட்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com