

தமிழ் மக்களின் வழிபாட்டில் முருகப்பெருமானுக்கு மிக முக்கிய இடம் உண்டு. 'தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் கந்தனின் அருளைப் பெற பல்வேறு வழிபாடுகளும், விரதங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவற்றுள் மிகவும் சிறப்பு வாய்ந்தது கந்த சஷ்டி விரதம் ஆகும்.
மாதந்தோறும் வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி என இரண்டு சஷ்டி திதி வந்தாலும், ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியே, கந்த சஷ்டி விழாவாக சிறப்பிக்கப்படுகிறது. இது 'மகா சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.
ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி தொடங்கி ஆறாம் நாளான சஷ்டி திதி வரை 6 நாட்கள், கந்த சஷ்டி விரத காலம் ஆகும். சிலர் கூடுதலாக ஒரு நாள், அதாவது 7 நாட்கள் விரதம் இருந்து சப்தமி திதியில் விரதத்தை நிறைவு செய்வதுண்டு.
முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்து ஆட்கொண்டு, தேவர்களை துன்பத்தில் இருந்து விடுவித்த நாளை நினைவுகூரும் வகையில் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்து, பல அரிய வரங்களை பெற்று தேவர்களை கொடுமைப்படுத்திய சூரபத்மன் மற்றும் அவனது தலைமையிலான அசுர படைகளை அழிப்பதற்காக முருகப்பெருமான், தேவர்களின் படைக்குத் தலைமை தாங்கி போர் புரிந்தார். முருகப்பெருமான் தனது படைகளுடன் திருச்செந்தூரை அடைந்து, அங்கிருந்து அசுரர்களுக்கு எதிராகப் போர் தொடுத்ததாகக் கந்தபுராணம் விவரிக்கிறது.
ஆறு நாட்கள் நடைபெற்ற இந்தப் போரில் தாரகாசுரன், சிங்கமுகன் உள்பட அசுர படை தலைவர்கள், வீரர்கள் வீழ்த்தப்பட்டனர். இறுதியாக சூரபத்மனுடன் முருகப் பெருமான் நேரடியாகப் போரிட்டார். அப்போது சூரபத்மன் பல்வேறு மாய உருவங்களை எடுத்து முருகப்பெருமானை எதிர்த்து நின்றான். ஆனால் அவனது வலிமையும் மாயத்திறனும் முருகப்பெருமானின் தெய்வீக ஆற்றலுக்கு முன் நிலைக்கவில்லை. இறுதியில் சூரபத்மன் ஒரு பெரிய மாமரமாக உருவெடுத்து நின்றான். அப்போது முருகப்பெருமான் தனது வேலால் அந்த மாமரத்தை இரண்டாகப் பிளந்தார். அப்போது ஒரு பகுதி சேவலாகவும், மற்றொரு பகுதி மயிலாகவும் மாறியதாகப் புராணம் கூறுகிறது.
முருகப்பெருமானின் தெய்வீக சக்தியை உணர்ந்த சூரபத்மன் மன்னிப்பு கோரினான். இதையடுத்து சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த தலமாக கருதப்படுவதால், இங்கு கந்த சஷ்டி விழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இது கடற்கரையோரம் அமைந்த கோவில் என்பது கூடுதல் சிறப்பாகும். கந்தசஷ்டி விழா நடக்கும் நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் வளாகத்திலேயே தங்கி இருந்து விரதம் அனுஷ்டிக்கிறார்கள். விரத நாட்களில் கோவிவில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறுகின்றன. சிகர நிகழ்வாக, திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதில், பக்தர்கள் எழுப்பும் 'அரோகரா' முழக்கம் மெய்சிலிர்க்க வைக்கும்.
அவ்வகையில் திருச்செந்தூரில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா இன்று விமரிசையாக தொடங்கியது. நவம்பர் 15-ந் தேதி சூரசம்ஹாரமும், 16-ந் தேதி முருகன் - தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதேபோல் பல்வேறு முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது.
கந்த சஷ்டியை முன்னிட்டு பக்தர்கள், பக்தி சிரத்தையுடன் சஷ்டி விரதம் மேற்கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள். கந்தசஷ்டி விரதத்தை பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ற முறையில் கடைப்பிடிப்பது உண்டு. சிலர் 48 நாட்கள், 21 நாட்கள். 11 நாட்கள் என நீண்ட நாட்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள். இந்த முறையில் விரதம் கடைப்பிடிக்கும் பக்தர்கள் ஏற்கனவே விரதத்தை தொடங்கிவிட்டனர்.
பெரும்பாலான பக்தர்கள் கந்த சஷ்டி காலத்தில் 6 அல்லது 7 நாட்கள் விரதம் இருப்பார்கள். ஐப்பசி மாதத்தில் பிரதமை திதியில் இந்த விரதத்தை தொடங்குவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு இன்று விரதம் தொடங்கினர். திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள், கடலில் நீராடி விரதத்தை தொடங்கினர்.
விரதம் இருப்பவர்கள் வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து, சிவப்பு மலர்களால் அலங்கரிக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் படைக்கலாம். முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி, முருகப்பெருமானிடம் ஆசிர்வாதம் பெற்று விரதத்தை தொடங்க வேண்டும்.
விரதம் இருக்கும் ஆறு நாட்களும் முழுமையாக உபவாசம் (உணவின்றி) இருப்பது மிகச் சிறப்பு. ஒருவேளை உணவு அருந்தி விரதம் இருக்கலாம். அதுவும் இயலாதவர்கள் பால், பழம் மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். விரத நாட்களில் முருகப்பெருமானின் திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தும், 'ஓம் சரவண பவ' என்ற மந்திரத்தை மனதில் நிறுத்தியும் வழிபட வேண்டும். ஆறாவது நாள் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வு, தீமையை நன்மை வெல்வதன் அடையாளமாகக் கருதப்படுகிறது. சூரசம்ஹாரத்தைக் கண்டு தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஏழாம் நாளில் நடைபெறும் தெய்வானை - முருகன் திருக்கல்யாணத்தைக் கண்டு தரிசித்து, பிரசாதம் உட்கொண்டும் விரதத்தை நிறைவு செய்யலாம்.
குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு கந்த சஷ்டி விரதம் ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். 'சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்பது பழமொழி. இதன் பொருள். சஷ்டி திதியில் விரதம் இருந்தால், கருப்பையில் (அகப்பை) குழந்தை வரும் என்பதாகும். மேலும், கந்த சஷ்டி விரதத்தை மனத் தூய்மையுடனும் உண்மையான பக்தியுடனும் கடைப்பிடிக்கும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்வு, எதிரிகளின் அச்சுறுத்தல் இன்றி, மன அமைதி மற்றும் சகல காரியங்களிலும் வெற்றி பெற முருகப்பெருமான் அருள்வார்.