

சிக்கல்,
பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது.
நாகை மாவட்டம் சிக்கலில் பிரசித்தி பெற்ற சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. சஷ்டி விழாவில் முருகன், வேல் நெடுங்கன்னி அம்மனிடம், வேல் வாங்கும்போது முருகனின் முகம் மற்றும் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும் அற்புத காட்சியை தரிசனம் செய்வதற்காக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருவார்கள்.
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 10 நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா வருகிற 9-ந் தேதி (திங்கள் கிழமை) கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவானது 18-ந்தேதி (புதன்கிழமை) வரை நடக்கிறது.
விழாவின் இரண்டாம் நாளான 10-ந்தேதி (செவ்வாய் கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ந்தேதி (புதன் கிழமை) இரவு ஆட்டுக்கிடா வாகனத்திலும், 12-ந்தேதி (வியாழக்கிழமை) தங்க மயில் வாகனத்திலும், 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வெள்ளி ரிஷப வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.
14-ந்தேதி (சனிக்கிழமை) காலை தேரோட்டமும், இரவு வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியும், 16-ந்தேதி (திங்கள் கிழமை) தெய்வசேனை திருக்கல்யாணம், 17-ந்தேதி தேதி (செவ்வாய் கிழமை) வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும்,18-ந்தேதி (புதன் கிழமை) விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது.