கன்னியாகுமரியில் கோலாகலமாக நடந்த பகவதி அம்மன் கோவில் தெப்ப திருவிழா

அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய அம்மன், தெப்பக்குளத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா, தெப்ப உற்சவம்
தெப்ப உற்சவம்
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலையில் தேரோட்டம் நடந்தது.

10-ம் திருவிழாவான நேற்று காலையில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கன்னியாகுமரி கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, பிள்ளையார் கோவில் தெரு, நடுத்தெரு ,தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, வடக்கு தெரு, மறக்குடி தெரு வழியாக பஜனை மடத்தை சென்றடைந்தது.

சிறப்பு வழிபாடு

அப்போது வழி நெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்திவழிபட்டனர். கண்ணன் காபி பார் அதிபர் கண்ணன் ஒரு டன் எடையுள்ள ராட்சத மாலையை பகவதி அம்மனுக்கு அணிவித்து வழிபாடு நடத்தினார். அதன்பிறகு இரவு 8.30 மணிக்கு பஜனை மடத்தில் வைத்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன்னாள் மேலாளர் சொக்கலிங்கம் பிள்ளை சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது.

அப்போது பகவதி அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடும் தீபாராதனையும் நடந்தது. அதனைத் தொடர்ந்து காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்திராலய நிறுவனர் பொன் காமராஜ் சுவாமிகளின் நர்த்தனபஜனை நடந்தது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், தெப்ப திருவிழா
தெப்ப உற்சவம்

தெப்பத்தில் பகவதி அம்மன்

இரவு 10 மணியளவில் தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கன்னியாகுமரி வடக்கு ரதவீதியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த தெப்பக்குளத்தில் பக்தர்களின் கடும் முயற்சியினால் தண்ணீர் நிரப்பி இந்த ஆண்டு தெப்ப திருவிழா நடத்தப்பட்டது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி, கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெப்பக்குளத்துக்கு ஊர்வலமாக வந்தடைந்தார்.

பின்னர் தெப்பக்குளத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அம்மனை எழுந்தருளச் செய்து விசேஷ பூஜைகள் நடத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பின்னர் தெப்ப உற்சவம் தொடங்கியது. தெப்பத்தில் எழுந்தருளிய அம்மன், தெப்பக்குளத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கண்கொள்ளா காட்சி

தெப்ப உற்சவத்தை முன்னிட்டு தெப்பக்குளக் கரையில் மெல்லிசை கச்சேரி நடைபெற்றது. தெப்பக்குளத்தை சுற்றி அமைந்துள்ள படிக்கட்டுகளில் பஞ்ச வாத்தியம், சிங்காரி மேளம், செண்டை மேளம் இசைக்கப்பட்டது. தெப்பக்குளதத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தெப்பக்குளத்தை சுற்றிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

தெப்ப உற்சவம் நிறைவு பெற்றதும் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. அதன்பிறகு அம்மன் கோவில் கிழக்கு வாசலில் அமைந்து உள்ள ஆராட்டு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நள்ளிரவு 12 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் உள்ள கடலில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் நேற்று நள்ளிரவில் திறக்கப்பட்டு அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பகவதி அம்மனை தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வந்து தெப்பத்திருவிழா நடத்த கடும் முயற்சி எடுத்த குமரி மாவட்ட பா.ஜ.க. செயலாளர் சி.எஸ்.சுபாஷ், அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் பக்தர்கள் சங்க தலைவர் வக்கீல் சிவகுமார் நாகப்பன் ஆகியோருக்கு தளவாய்சுந்தரம் எம்.எல். ஏ. பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com