கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்

கன்னியாகுமரி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் திருவிழா, தேரோட்டம்
தேரோட்டம்
Published on

கன்னியாகுமரி,

உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசைக் கச்சேரி, பக்தி சொற்பொழிவு, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து காலை 9.15 மணிக்கு வெள்ளி பல்லக்கில் உற்சவ அம்மன் சர்வ அலங்காரத்துடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டார். சன்னதி தெரு, கன்னியம்பலம் மண்டபம், தெற்கு ரதவீதி, நடுத்தெரு வழியாக தேர் நிற்கும் கீழ ரத வீதியை அடைந்ததும், உற்சவ அம்மன், பட்டு மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் திருவிழா, தேரோட்டம்
தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்த காட்சி

என்.தளவாய்சுந்தரம்

அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் விசேஷ பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், குமரி மாவட்ட த.வெ.க.செயலாளர் மாதவன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, ஆரல்வாய்மொழி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவரும் தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான முத்துக்குமார், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் தாமரை தினேஷ், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவர் தம்பித்தங்கம், மாவட்ட அ.தி.மு.க இலக்கிய அணி துணை செயலாளர் பகவதியப்பன், மாவட்ட மாவட்ட பா.ஜ.க. செயலாளர் சி.எஸ். சுபாஷ், அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் பக்தர்கள் சங்க தலைவர் வக்கீல் சிவகுமார் நாகப்பன், செயலாளர் நாகராஜன், துணைத் தலைவர் நாயகம் பொருளாளர் பப்பு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் பக்தஇழுத்தனர்.

பக்தர்கள் தரிசனம்

கீழ ரத வீதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்ட தேர், தெற்கு ரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் கீழ ரதவீதியில் பகல் 1.30 மணிக்கு நிலையை அடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் உயரமான கட்டிடங்களில் இருந்து தேரின் மீது மலர் தூவி வரவேற்று வழிபட்டனர்.

தேரோடும் வீதிகளில் வழி நெடுகிலும் பக்தர்களுக்கு மோர், தண்ணீர் பாட்டில், பானகம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. தேர் நிலைக்கு வந்ததும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

போக்குவரத்து வசதி

கன்னியாகுமரி நகராட்சி சார்பில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. தேரோட்ட நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கலந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 10 மணி வரை 2 மணி நேரம் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது.10 மணிக்கு பிறகு படகு போக்குவரத்து வழக்கம்போல் நடைபெற்றது.

இன்று மாலை 5.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவும், இரவு 7 மணிக்கு பக்தி கர்நாடக இசைப் பாட்டும், 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com