கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா.. வெள்ளிக்குடத்தில் புனித நீர் எடுத்து வந்து அபிஷேகம்

யானை மீது புனித நீர் குடத்தை வைத்து, மேளதாளம் முழங்க பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
புனித நீர் குடத்தை யானை மீது வைத்து ஊர்வலம்
புனித நீர் குடத்தை யானை மீது வைத்து ஊர்வலம்
Published on

கன்னியாகுமரி,

உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா மற்றும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா ஆகிய 2 பெரிய திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழா காலங்களில் 10 நாட்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு நடைபெறும் அபிஷேகத்துக்குரிய புனித நீர், கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் எடுத்து, நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 30-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த 10 நாட்கள் திருவிழாவிலும் காலை 10 மணிக்கு நடக்கும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீர் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விசுவநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் எடுத்து வரப்படும்.

அதன்படி திருவிழாவின் முதல்நாளான இன்று கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கரதீர்த்த காசி விஸ்வநாதர் கோவில் கிணற்றில் இருந்து இன்று காலை 10 மணிக்கு வெள்ளிக்குடத்தில் புனித நீர் எடுக்கப்பட்டது. அந்த புனித நீர் காசி விஸ்வநாதர் முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது. கோவில் முன்பு அலங்கரித்து நிறுத்தி வைத்திருந்த யானைக்கு கஜபூஜை நடத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பின்னர் யானை மீது புனித நீர் குடத்தை வைத்து, மேளதாளம் முழங்க பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த ஊர்வலம் ரெயில் நிலைய சந்திப்பு, வடக்கு ரத வீதி, நடுத்தெரு, தெற்கு ரத வீதி, சன்னதி தெரு வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை அடைந்தது. பின்னர் பகவதி அம்மனுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com