நவராத்திரி விழா.. வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த கன்னியாகுமரி பகவதி அம்மன்

நவராத்திரி விழாவின் 5-ம் நாளான இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நவராத்திரி விழா: வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த கன்னியாகுமரி பகவதி அம்மன்
வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த பகவதி அம்மன்
Published on: 

கன்னியாகுமரி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் வாகன வீதிஉலா நடைபெறுகிறது.

வெள்ளி காமதேனு வாகனம்

4-ம் திருநாளான நேற்று மாலையில் ஆன்மீக உரையும் இரவு பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனியின்போது ஓதுவார்களின் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடல் இடம்பெற்றது. 3-வது சுற்று நிறைவில், கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளியிருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், கன்னியாகுமரி நகராட்சி வார்டு கவுன்சிலர் சி.எஸ்.சுபாஷ், கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் பக்தர்கள் சங்க தலைவர் வக்கீல் சிவகுமார் நாகப்பன், செயலாளர் நாயகம், துணை செயலாளர் நாகராஜன், பொருளாளர் பிரகாஷ், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளரும் குமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க செயலாளருமான வைகுண்டபெருமாள், கன்னியாகுமரி பார்க் வியூ பஜார் வியாபாரிகள் சங்க தலைவர் பகவதியப்பன், தமிழக வெற்றி கழக நிர்வாகி ஹரிபூபதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்க செயலாளர் முருகன் உள்பட திரளான பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

வாகன பவனியைத் தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

சிறப்பு அபிஷேகம்

5-ம் திருநாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் அம்மனுக்கு தங்க கிரீடம் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது.

மாலையில் சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். வாகன பவனியின்போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள் கூடை -கூடையாக தாமரை மரிக்கொழுந்து, கொழுந்து, பிச்சி, முல்லை, ரோஜா உள்பட பல வண்ண மலர்களை தூவி வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com