கன்னியாகுமரி: பகவதி அம்மன் கோவிலில் இன்று வைகாசி விசாக கால்நாட்டு விழா

பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
கன்னியாகுமரி: பகவதி அம்மன் கோவிலில் இன்று வைகாசி விசாக கால்நாட்டு விழா
Published on

கன்னியாகுமரி,

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது.

அதன்படி கன்னியாகுமரி தெற்கு ரத வீதியில் உள்ள கன்னியம்பலம் மண்டபத்திலும் கால்நாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. 1-ம் திருவிழாவான வருகிற 21-ந்தேதி காலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நிறைவுற்றதும், கன்னியாகுமரி கீழரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேரிலும் கால்நாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

முன்னதாக 20-ந்தேதி மாலையில் கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா அறக்கட்டளை சார்பில் கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக நடக்கும் கொடி மரக்கயிறு கன்னியாகுமரி கிறிஸ்தவர்களால் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது.

விழாவில் 21-ந்தேதி காலை 8 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து விழாவானது 30-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், இரவு சமய சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி, சாமி வாகன பவனி உள்பட பல்வேறு நிழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழாவில் 29-ந்தேதி காலையில் 9.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 30-ந்தேதி காலை 6.15 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. தெப்பத் திருவிழா நிறைவடைந்த பின்னர் நள்ளிரவில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்தன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com