காரமடை அரங்கநாதர் கோவிலில் தாசர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை படைத்து வழிபாடு

அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று அரங்கநாத பெருமாளை வழிபட்டனர்.
காரமடை அரங்கநாதர் கோவிலில் தாசர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை படைத்து வழிபாடு
தாசர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் படைத்து ஆசி பெற்ற காட்சி
Published on: 

காரமடை,

புரட்டாசி கடைசி சனிக்கிழமை தினமான இன்று காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ததுடன், பகவானின் அடியார்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை படைத்து ஆசி பெற்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது காரமடை அரங்கநாதர் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவார்கள்.

அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்றும் (5-வது வார சனிக்கிழமை) சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், வெண்பட்டு உடுத்தி ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதர் சுவாமி வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலில் வலம் வந்து கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். வேதபாராயணம், அஷ்டோத்ரம் மங்கள ஆரத்தி சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று மூலவர் அரங்கநாத பெருமாளையும், உற்சவ மூர்த்தியையும் வழிபட்டனர்.

புரட்டாசி 5-வது சனிக்கிழமையை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
அரங்கநாதரை தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்ற பக்தர்கள்

விஷ்ணு தாசர்கள்

மேலும் சிலர் நேர்த்திக்கடனாக அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் மற்றம் காய்கறி வகைகளை கோவில் வளாகத்தில் இருந்த தாசர்களுக்கு (பெருமாளின் அடியவர்கள்) படைத்து ஆசி வேண்டினர். தாசர்கள் பூஜை செய்து அவற்றை பெற்றுக்கொண்டபின், அவர்களிடம் இருந்து சிறிதளவு அரிசி, பருப்பு காய்கறிகளை, மடியேந்தி பெற்று, வீட்டிற்கு கொண்டு சமைத்து உண்டனர்.

வரும் 20-ந் தேதி மகா நவமியன்று சரஸ்வதி பூஜையும், வரும் 21-ந் தேதி விஜயதசமி பூஜையும் நடைபெறுகிறது. அரங்கநாத பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடுதல், நவராத்திரி உற்சவம் பூர்த்தி நடக்கிறது.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் அடியார்களான விஷ்ணு தாசர்களுக்கு பச்சரிசி, பருப்பு, காய்கறிகள் தானம் வழங்குவது மிக விசேஷமானது. இவ்வாறு செய்வதால் வறுமை நீங்கி, குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

X

Daily Thanthi
www.dailythanthi.com