கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு: அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பக்தர்களின் வரிசை கோவில் அருகில் உள்ள வடஒத்தவாடை தெருவில் நீண்டு காணப்பட்டது.
கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு: அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
அம்மணி அம்மன் கோபுரம் எதிரில் திரண்டிருந்த பக்தர்கள்
Published on: 

திருவண்ணாமலை.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தீபத் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற விழாவில் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி, சண்டிகேஸ்வரர் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 24-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

மகா தீபத்தைத் தொடர்ந்து 3 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் 25-ந் தேதி சந்திரசேகரர் தெப்ப உற்சவமும், 26-ந் தேதி பராசக்தி அம்மன் தெப்ப உற்சவமும், 27-ந்தேதி சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடந்தது.

மகா தீபம்

நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெற்றது. இதையொட்டி சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபம் முன்பு ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க மாட வீதிகளில் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த 24-ந் தேதி மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை காட்சி அளிக்கும். அதன்படி 5-வது நாளாக நேற்று மலையில் உச்சியில் மகா தீபம் காட்சி அளித்தது.

திருவிழா நிறைவு.. பக்தர்கள் குவிந்தனர்

கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் சாமி தரிசனம் செய்ய ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் அருகில் உள்ள காத்திருப்பு கூடத்தின் வழியாகவும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த இரு வழியாக சென்ற பக்தர்களின் வரிசை கோவில் அருகில் உள்ள வடஒத்தவாடை தெருவில் நீண்டு காணப்பட்டது.

நேற்று பகலில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். சிலர் கையில் குடையுடன் சென்றனர். வரிசையில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேல் ஆனதாக தெரிவித்தனர்.

X