

திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் நேற்று கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, பஞ்சா மிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தங்க கிரீடம் தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாதாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து காலை 9 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். அலங்காரம் மற்றும் தீபாதாரணை நடந்தது.
மாலை 6 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், வெள்ளி மயில் வாகனத்தில் தேர் வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அப்போது மாடவீதியில் சொக்கப்பனையில் நெய் தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் கோவில் எதிரே உள்ள பச்சரிசி மலையில் 350 கிலோ மகா நெய் தீபம் ஏற்றப்பட்டது. அப்போது மலைக்கோவிலில் குவிந்திருந்த பக்தர்கள் அரோகரா, அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். இதை தொடர்ந்து வீடுகள் மற்றும் கடைகளில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
இந்த மகா தீபத்தில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் பொது வழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீபத்திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை கமிஷனர் நித்தியா மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதால் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 5 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழாவில் மாடவீதியில் பக்தர்கள் சொக்கப்பனை யில் தீபம் ஏற்றுவதையும், தொடர்ந்து பச்சரிசி மலையில் ஏற்றப்படும் தீபத்தையும் ஒருங்கிணைந்து பார்த்து மகிழ்வார் கள். நேற்று நடைபெற்ற தீபத்திருவிழாவில் பக்தர்களை மாடவீதியில் தடுப்பு வேலிகள் அமைத்து ஆங்காங்கே நிறுத் தியதால் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பக்தர்கள் மகா தீபம் ஏற்றுவதையும், சொக்கப்பனை கொளுத்துவதையும் ஒரு சேர பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.