திருமலையில் கார்த்திகை வன போஜனம்: 29-ம் தேதி நடைபெறுகிறது

பாரிவேட்டை மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.
திருப்பதி திருமலையில் வனபோஜனம்
வனபோஜனம்
Published on: 

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாதத்தில் பாரம்பரிய முறைப்படி வனபோஜனம் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வனபோஜனம் நிகழ்ச்சி, திருமலையில் கோகர்பம் அணை அருகில் உள்ள பாரிவேட்டை மண்டபத்தில் வருகிற 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

பாரிவேட்டை மண்டபத்தில் திருமஞ்சனம்

அன்றைய தினம் காலையில் உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து சிறிய கஜ வாகனத்திலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் பல்லக்கிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மேள, தாளம் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பாரிவேட்டை மண்டபத்தை அடைகிறார்கள்.

அங்கு பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிக்குள் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்வில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

வன போஜனம் நிகழ்ச்சியை கருத்தில் கொண்டு, அன்றைய தினம் கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

சீனிவாச மங்காபுரம்

இதேபோல் சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை வனபோஜன மஹோற்சவம், டிசம்பர் 5ஆம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.

அன்றைய தினம் காலையில் சுவாமி மற்றும் தாயார்களின் உற்சவ மூர்த்திகள், ஊர்வலமாக ஸ்ரீவாரி மெட்டுக்கு அருகிலுள்ள பாரிவேட்டை மண்டபத்திற்கு செல்கிறார்கள். காலை 7 மணி முதல் 9 மணி வரை இந்த ஊர்வலம் நடைபெறும்.

வன போஜனம்

பாரிவேட்டை மண்டபத்தில் காலை 10 மணி முதல் 11 மணி வரை உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரங்கள், வனபோஜனம் (வன விருந்து) மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 5 மணிக்கு உற்சவ மூர்த்திகள் மீண்டும் கோவிலுக்குத் திரும்புவார்கள்.

இந்நிகழ்வை முன்னிட்டு, டிசம்பர் 5 அன்று 'நித்ய கல்யாணோற்சவம்' எனும் அர்ஜித சேவை ரத்து செய்யப்படுகிறது.

X