

நச்சலூர்,
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், நங்கவரம் பேரூராட்சி, குறிச்சி அம்பேத்கர் நகரில் பிரசித்தி பெற்ற அழகு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீராடி கரகம் பாலித்தும், தீர்த்த குடம் மற்றும் பால்குடம் ஆகியவற்றை மேளத்தாளத்துடன் கோவிலுக்கு எடுத்து வந்தனர். இதையடுத்து நேற்று அம்மனுக்கு அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும் திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அழகு முத்து மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், மஞ்சள் உள்பட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் அம்மனுக்கு மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் மற்றும் சுவாமி ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.