

ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலைவிலும் நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மற்றும் இலங்கை மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. ஆலயத்தின் முன்புள்ள கொடி மரத்தில் அந்தோணியாரின் உருவம் பொறித்த கொடியை நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் ஏற்றி வைக்கிறார்.
தொடர்ந்து ஆலயத்தில் திருவிழா திருப்பலி நடைபெற்று சிலுவைப்பாதை திருப்பலியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட சப்பரத்தை இலங்கை கடற்படையினர் தோளில் சுமந்தபடி ஆலயத்தை சுற்றி வலம் வருவர். விழாவில் 2-ம் நாளான நாளை மறுநாள், காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் தலைமையில் நடைபெறும். தமிழ், சிங்கள மொழிகளில் இது நடத்தப்படும்.
கச்சத்தீவு ஆலய திருவிழாவிற்கு ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து செல்ல 3,033 ஆண்கள், 726 பெண்கள் மற்றும் 150 குழந்தைகள் உட்பட மொத்தம் 3,996 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்கள் இன்று காலையில் 118 படகுகள் மூலம் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டனர். இந்த பயணத்தை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை யாழ்ப்பாணம் நிர்வாகம் செய்துள்ளது.
விழாவை முன்னிட்டு ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 300-க்கும் அதிகமான நாட்டுப்படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.