

கழுகுமலை,
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள வானரமுட்டி கெண்டியாரம்மன் கோவில் கொடை விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக பெண்கள் பங்கேற்ற 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
விளக்கு பூஜையையொட்டி நேற்று மதியம் 3 மணியளவில் குற்றாலம் இராமலிங்கசுவாமி திருக்கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
7 மணியளவில் பெண்கள் பங்கேற்ற 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். உலக நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நள்ளிரவு 12 மணிக்கு மதுமடத்தில் இருந்து அம்மன் சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (புதன் கிழமை) காலை 8 மணியளவில் திரளான பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.
பிற்பகல் 3 மணியளவில் திரளான பக்தர்கள் கவுரு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இரவு 7 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற உள்ளது.