நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்... கோவில்களில் குவிந்த பக்தர்கள்

நாடு முழுவதும் கோவில்களில் காலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு, சென்னை இஸ்கான் கோவிலில் குவிந்த பக்தர்கள்
சென்னை இஸ்கான் கோவிலில் பகவானை வழிபடும் பக்தர்கள்
Published on

சென்னை,

நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி, ரோகிணி நட்சத்திரம் கூடிய தினத்தில் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் வழக்கம் உள்ளது. அவ்வகையில் இன்று (4.9.2026) நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி போன்ற பெயர்களிலும் இந்த பெருவிழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனர். மாவிலை தோரணங்கள் மற்றும் மலர்களால் விதவிதமாக அலங்காரம் செய்தும், கிருஷ்ணரை வரவேற்று பூஜைகள் செய்தும், விதவிதமான பலகாரங்களை படையலிட்டும் வழிபடுகிறார்கள். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து மகிழ்கின்றனர். கோவில்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகள் குதூகலத்துடன் பங்கேற்கிறார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி விழா, சென்னை இஸ்கான் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர், ராதை
சென்னை இஸ்கான் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர், ராதை

கோவில்களில் குவிந்த பக்தர்கள்

இதேபோல் நாடு முழுவதும் கோவில்களில் இன்று காலை முதலே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து பகவானை வழிபடுகின்றனர்.

குறிப்பாக கிருஷ்ண பக்தியை மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஆன்மிக பணியாற்றி வரும் இஸ்கான் சார்பில், நாடு முழுவதிலும் உள்ள இஸ்கான் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கோவில் வளாகம் முழுவதும் பிரமாண்டமான முறையில் அலங்காரம் செய்யப்பட்டு, பகவான் கிருஷ்ணரை மகிழ்விக்கும் வகையில் சிறப்பு நாம சங்கீர்த்தனங்கள், சிறப்பு அபிஷேகங்கள், பிரசாத விநியோகம் நடைபெறுகின்றன. காலை முதலே ஏராளமான பக்தர்கள் இஸ்கான் கோவில்களுக்கு வருகை தந்து பகவானை தரிசனம் செய்தவண்ணம் உள்ளனர்.

சென்னை இஸ்கான்

நள்ளிரவு சிறப்பு ஆரத்தி

அதேசமயம், பகவான் கிருஷ்ணர் நள்ளிரவு வேளையில் அவதரித்தவர் என்பதால், பெரும்பாலான இஸ்கான் கோவில்களில் பிரதான பூஜை மற்றும் சிறப்பு ஆரத்தி நள்ளிரவு வேளையில் நடைபெறுகிறது. அதேபோல் பகவானின் தீவிர பக்தர்கள் வீடுகளில் காலையில் எளிய முறையில் வழிபாடு செய்துவிட்டு, இரவில் பகவானுக்கு பிடித்தமான நைவேத்யங்களை சமர்ப்பித்து பிரதான பூஜையை மேற்கொள்வார்கள்.

பக்தர்கள் வருகை அதிகரிப்பு

பிரசித்தி பெற்ற கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோகுலாஷ்டமியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசல் முக மண்டபத்தில் இன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடைபெறும். இதற்காக தங்க சர்வபூபால வாகனத்தில் கிருஷ்ணரை எழுந்தருள செய்து நிவேதனங்கள் சமர்ப்பிக்கப்படும். உக்ர ஸ்ரீநிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மற்றும் கிருஷ்ணருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடத்தப்பட்டு, துவாதசாராதனம் நடைபெறும்.

உறியடி உற்சவம்

நாளை (சனிக்கிழமை) உறியடி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். மாலை 4 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் மலையப்ப சுவாமி தங்க திருச்சியிலும், கிருஷ்ணர் மற்றொரு திருச்சி வாகனத்திலும் மாட வீதிகளில் உலா வருகின்றனர்.

இதையொட்டி அன்று ஆர்ஜித சேவைகளான ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ரதீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை கோகர்பம் அணை அருகிலுள்ள பூங்காவில், திருமலை திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை சார்பில் காளியமர்த்தனரான கிருஷ்ணருக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை பஞ்சாபிஷேகம் நடைபெறும்.

திருப்பதி கோசாலை

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷண சாலையில் (கோசாலை), கோகுலாஷ்டமி விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தைக் கொண்டாடும் வகையிலும், கோ-பூஜை மற்றும் கோ-சேவை ஆகியவற்றின் சிறப்புகளைப் பரப்பும் வகையிலும் பல்வேறு ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கோகுலத்தைப் போன்று அழகான சூழலை உருவாக்கும் வகையில், கோசம்ரக்ஷண சாலை மாவிலைத் தோரணங்கள், மலர்கள் மற்றும் பிற பாரம்பரிய அலங்கார பொருட்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. அங்கு பராமரிக்கப்படும் பசுக்களும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள. ஸ்ரீ வேணுகோபாலசுவாமி சன்னதியில் சுவாமிக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.10 மணிக்கு ஸ்ரீ வேணுகோபாலசுவாமி சன்னதியில் கோபூஜை மற்றும் சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதேபோல் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள பிற கோவில்களிலும் கோகுலாஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com