நெல்லை கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்- திரளான பக்தர்கள் தரிசனம்

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு மகா ஆரத்தி நடந்தது.
நெல்லை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
இஸ்கான் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்கள்
Published on

நெல்லை,

நெல்லை கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ண ஜெயந்தி விழா

மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும். கிருஷ்ணர் அவதார தினத்தை ஆண்டு தோறும் பக்தர்கள் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். அவ்வகையில் இந்த ஆண்டு நேற்று (4.9.2026) கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. வீடுகளிலும் கிருஷ்ணர் படங்கள் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. கோசாலைகள் சுத்தம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சில இடங்களில் உறியடி விழாவும் நடத்தப்பட்டது.

நெல்லையில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில், இஸ்கான் கோவில் மற்றும் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

நெல்லை இஸ்கான் கோவிலில் சிறப்பு ஆரத்தி
நெல்லை இஸ்கான் கோவிலில் சிறப்பு ஆரத்தி

இஸ்கான் கோவில்

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று காலையில் சிறப்பு மகா ஆரத்தி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் அங்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தி விழா, எட்டெழுத்து பெருமாள் கோவில் அருகே உள்ள கோசாலையில் சிறப்பு பூஜை
எட்டெழுத்து பெருமாள் கோவில் அருகே உள்ள கோசாலையில் சிறப்பு பூஜை

எட்டெழுத்து பெருமாள் கோவில்

எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலையில் பெருமாள், கிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சி அளித்தார். எட்டெழுத்து பெருமாள் கோவில் அருகே உள்ள கோசாலையில் உள்ள கோபால கிருஷ்ணருக்கு காலை 5 மணிக்கு உதயகால சிறப்பு தீபாராதனையும், ஹரே கிருஷ்ணா அகண்ட நாம ஜெபமும் நடந்தது.

9 மணிக்கு பூர்ணாபிஷேகமும், இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தன. 11 மணிக்கு சிறப்பு கோபூஜை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு கிருஷ்ணருக்கு 58 வகையான பலகாரங்கள் படைக்கப்பட்டன.

மாலை 6 மணிக்கு கிருஷ்ணருக்கு மண்பானையில் வெண்ணெய், நெய், முறுக்கு, அதிரசம், லட்டு, அல்வா, சீடை என 108 வகையான திண்பண்டங்களும் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வெண்ணை பூசப்பட்டது. 5,008 மண்பானைகளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. பிரசாதம் படைக்கப்பட்ட பானைகள், கலயங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. நேற்று காலை முதல் இரவு வரை கிருஷ்ண பிரசாதம் அன்னதானம் நடந்தது.

மேலும் டோக்கன் வாங்கிய பக்தர்களுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் பானைகள், கலயங்கள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு உறியடி திருவிழா நடைபெறுகிறது.

கொக்கிரகுளம் கிருஷ்ணர் கோவிலில் சுவாமிக்கு நேற்று சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

நெல்லை டவுன் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் உள்ள சந்தான கிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சந்தான கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

பாளையங்கோட்டை ராஜாக்கள் தெருவில் உள்ள கிருஷ்ணன் பஜனை மடத்தில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா நடந்தது. இதே போல் பல்வேறு இடங்களில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா, உறியடி திருவிழா உள்ளிட்டவை கோலாகலமாக நடந்தன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com